
மழைக்காலம் வந்து விட்டாலே கூடவே சளியும், இருமலும் மற்றும் பல தொற்றுக்களும் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். அவற்றை குணமாக்க மருத்துவரை பல முறை சென்று பார்த்தும் சரியாகாத சில உடல் பிரச்னைகள், எளிதான கை வைத்தியத்தில் குணமாகி விடும். அத்தகைய கை வைத்தியங்கள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்!
1. சித்தரத்தை, பனங்கற்கண்டு இவற்றை சம அளவு எடுத்து கசாயம் செய்து மூன்று வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல், சளி குணமாகும்.
2. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், சீரகம் சேர்த்து 5 கிராம் பொடி செய்ததை தினமும் காலையிலும் மாலையிலும் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர தலைச்சுற்றல் குணமாகும்.
3. கருவேலமர சாற்றை பிழிந்து வெந்நீரில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாவதோடு, காய்ச்சல் போன்ற நோய்களும் குணமாகும்.
4. முசுமுசுக்கை இலையை நறுக்கி வெங்காயத்துடன் நெய்யில் வதக்கி பகல் வேளையில் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாகும்.
5. தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து குடிக்க, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் நீங்கும்.
6. தும்பை இலைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால் தலைவலி காணாமல் போய்விடும்.
7. முருங்கைக்கீரையின் தளிர்களை இடித்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து 3 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட, ஜலதோஷத்தை குணப்படுத்தும்.
8. வெந்தயத்தின் தண்டை வாயில் போட்டு சுவைத்தால் குமட்டல் வராது.
9. மாதுளை சாப்பிடுவதால் பித்தம் நீங்குவதோடு, புத்திசாலித்தனம், நினைவாற்றல், எலும்பு வளர்ச்சி மற்றும் பித்தம் தொடர்பான நோய்கள் மேம்படும்.
10. தேன் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து கலந்து, வெடிப்பு உள்ள பாதங்களில் தொடர்ந்து தடவி வந்தால், பாத வெடிப்புகள் மறையும்.
11. எலுமிச்சை பழச்சாறை தேநீரில் கலந்து அருந்தினால் தொண்டை வலி நீங்கும்.
12. கரகரப்பான தொண்டை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பைப் போட்டு வாய் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
மேற்கூறிய கை வைத்தியங்கள் மழைக்கால நோய்களுக்கு மிகவும் அற்புதமான தீர்வாக அமைகின்றன.