நமக்கு நண்பர்களாக இருந்து கொண்டு சிலர் நம்மையே சில சமயம் மறைமுகமாகப் பேசி அட்டாக் செய்பவர்களாக இருக்கலாம். அதனால் நாம் மனவேதனை அடைந்து, ‘ஏன் இப்படி சொல்கிறாய்?’ என்று கேட்டால், ‘சும்மா ஜோக்குக்காக’ என்று சமாளிப்பார்கள். இன்னும் சில சமயம் நம்மை புகழ்வது போல் கேலி, கிண்டல் செய்து பழித்து கூறுவார்கள்.
இவர்களை எப்படி சமாளிப்பது என்று பல சமயம் நாம் திண்டாடி இருப்போம். சிரித்துக் கொண்டே அவர்கள் பேசும்பொழுது அப்பொழுது நாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்திருப்போம். ஆனால், மனதிற்குள் ஏதோ ஒரு இடத்தில் அது நம்மை குடைந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களை எப்படி சமாளிப்பது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
விளக்கம் கேட்பது: கிண்டலாக ஜோக்கடித்து அட்டாக் செய்பவர்களை முதலில் நாம் எதிர்வினை எதுவும் ஆற்றாமல் ஒரு நிமிடம் அவர்களை அப்படியே பார்க்க வேண்டும். பின்பு ‘இப்பொழுது என்ன சொன்னீர்கள்? கொஞ்சம் விளக்க முடியுமா?’ என்று கேட்க எதிர் தரப்பினர் விழித்துக் கொண்டு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைப்பார்கள்.
‘நீங்கள் பேசியது புரியவில்லை. திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்று கேட்டால் கிண்டல் அடிப்பதை நிறுத்திவிட்டு ‘சாரி சும்மா பேச்சுக்கு சொன்னேன்’ என்று சமாளிப்பார்கள். அத்துடன் நம்மிடம் இது மாதிரி விளையாடக் கூடாது என்பதையும் புரிந்து கொண்டு அடுத்த முறை இப்படி செய்வதைத் தவிர்ப்பார்கள்.
பதிலடி கொடுங்கள்: நம்மைப் பற்றி நாலு பேர் எதிரில் தவறாக கமெண்ட் செய்யும்பொழுது அதற்கு பதில் கொடுக்காமல் இருந்தால் அது உண்மை என்பது போல் ஆகிவிடும். எனவே, அப்படி இல்லாமல் அவர்கள் நம்மை வைத்து செய்யும் ஜோக்கை நாமும் திரும்ப அவரை நோக்கி செய்யத் துணிந்தால் அது அவர்கள் செய்யும் தவறை உணர்த்தும் விதமாகவும், பதிலடி கொடுப்பதாகவும் இருக்கும். அடுத்த முறை நாலு பேர் எதிரில் நம் இமேஜை பாதிக்கும் விதமாக இப்படிச் செய்ய மாட்டார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
எல்லைக்கோடு அமைத்துக் கொள்ளுங்கள்: சிலர் நம் மனதை புண்படுத்துகிறோம் என்பது தெரியாமலே வார்த்தைகளால் மாயாஜாலம் செய்யும்பொழுது நேரடியாக அவர்களிடம் தெளிவாகவும், அதே சமயம் கடுமையாகவும் அவர்கள் தங்களுடைய எல்லைகளை மீறுவதாகக் கூறலாம். அவர்கள் அப்படிப் பேசுவது தனக்கு அசௌகரியமாக உள்ளது என்பதையும் கூறலாம். ‘இம்மாதிரி பேசி உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம்’ என்றும் திட்டவட்டமாகக் கூறி விடுங்கள்.
தனிப்பட்ட முறையில் கூறுதல்: மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எப்பொழுதும் நம்மை இம்மாதிரி பேசி கிண்டல் அடிக்காதவர், நம் மீது உண்மையான அக்கறை உள்ளவர், ஏதோ தவறுதலாக வாய் தவறி பேசி இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களைத் தனியாக அழைத்து அவர் பேசியதன் மூலம் உங்கள் மனதில் ஏற்பட்ட சங்கடங்களைக் கூறி, ‘இனி இம்மாதிரி நடந்து கொள்ளாதீர்கள்’ என்று அறிவுறுத்தலாம்.
அவரின் பேச்சால் ஏற்பட்ட உங்கள் மனக் காயங்களை கூறி, இனி இம்மாதிரி தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் அவருடனான உறவை தக்க வைத்துக்கொள்ள நான்கு பேர் எதிரில் கூறாமல் தனிமையில் கூறுவது அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மாறுவதற்கு வழிவகுக்கும்.
உறவை ஹெல்தியாக்க: பேச்சால் அட்டாக் செய்பவர்களை இனம் கண்டு ஒதுங்கி விடுதல் நல்லது. நல்ல உறவுகளைப் பேணும்பொழுது இம்மாதிரியான தாக்குதல்கள் நேராது. தேவையற்ற, குணக்கேடான மனிதர்களிடமிருந்து விலகி இருப்பது நம் மனதை காயப்படாமல் காத்துக்கொள்ள உதவும். அளவோடு பழகுவதும் எல்லைகளை வகுத்துக் கொள்வதும் நம் உறவை ஹெல்தியாக வைத்துக்கொள்ள உதவும்.