அர்ஜுனா என்பது நோய்களை குணப்படுத்த உதவும் குணமுடைய ஒரு வகை மூலிகை மரம். ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் இது பல வழிகளில் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இது சிறந்த முறையில் உதவக்கூடியது. இம்மரத்தின் பட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் மொத்த ஆரோக்கியம் மேன்மையடையும். அர்ஜுனா மரப்பட்டை (bark) நீரிலிருந்து கிடைக்கும் 5 நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கும்: அர்ஜுனா மரப்பட்டையிலிருக்கும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தையும் கொழுப்புகளின் அளவையும் சமநிலையில் வைக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேன்மை பெற்று அதன் செயல்பாடுகள் சிறப்பாகும். இதய நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படும். இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியம் வலுவடையும்.
2. எடை பராமரிப்பு: எடைக் குறைப்பில் கவனம் செலுத்துவோர்களுக்கு அர்ஜுனா மரப்பட்டை நீர் சிறந்த துணையாகும். மெட்டபாலிஸத்தை ஊக்குவிக்கும் இதன் இயற்கையான குணமானது, உடலின் அதிகளவு கலோரிகளை சிறந்த முறையில் எரிக்க உதவி புரியும். மேலும் மேலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வைக் கட்டுப்படுத்தி அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுப்பதன் மூலம் அர்ஜுனா பட்டை நீர் எடைக் குறைப்பிற்கு உதவி புரிந்து உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
3. சருமப் பாதுகாப்பு: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி நடுத்தர வயதிலேயே முதுமையடைந்துவிட்டது போன்ற தோற்றம் வருவதைத் தடுக்கும். மற்ற வகை நோய்த் தாக்குதலிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். அர்ஜுனா பட்டை நீர் அருந்துவதன் மூலம் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கவும், அதன் எலாஸ்ட்ரிசிட்டித் தன்மையைப் பாதுகாக்கவும் முடியும். இதனால் சருமப் பளபளப்பும் இளமைத் தோற்றமும் பெறும். இயற்கை முறையில் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புவோர்க்கு அர்ஜுனா மரப்பட்டை நீர் சிறந்த தேர்வாகும்.
4. செரிமானம் சிறக்க: அர்ஜுனா மரப் பட்டையில் இயற்கையாகவே உள்ள ஒரு வகை கூட்டுப் பொருளானது செரிமானம் சிறந்த முறையில் நடைபெறவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். மேலும் சிக்கல் ஏதுமின்றி மலம் சுலபமாக வெளியேறவும் உதவி புரியும். காலையில் அர்ஜுனா மரப் பட்டை ஊறிய நீரை அருந்தி நாளைத் துவக்கும்போது, அந்த நீர் ஜீரணத்துக்கு உதவக்கூடிய என்ஸைம்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் நல்ல முறையில் உறிஞ்சப்படவும் உதவி புரியும். இதனால் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல முறையில் உதவக்கூடும்.
5. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: இந்த நீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் நோய் அதிகம் பரவக்கூடிய சீசன்களில் நோய்த் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
இரண்டு துண்டு அர்ஜுனா மரப் பட்டைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தப்படுத்தி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊற விட்டு காலையில் வடிகட்டி அந்த நீரை அருந்தலாம்.