ஒருவரைப் புரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான எண்ணங்கள், அனுபவங்கள் இருக்கும். ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அவர்களை இயற்கையான குணங்களுடன் ஏற்கப் பழகி கொண்டாலே போதும். நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இல்லையென்றால் எரிச்சல் அடைகிறோம். அதனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றிப் பழகுதல் நல்லது.
காது கொடுத்துக் கேட்பது: ஒருவரை சரியாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற சரியான வழி அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதுதான். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள், அவர்களுடைய உடல் மொழி, கருத்துகளை முழு கவனம் செலுத்தி கேட்பது, அவர்களை முழுமையாக தெரிந்துகொள்ளும் வரை அவர்களைப் பற்றி அனுமானம் எதுவும் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
மதிப்பு கொடுத்தல்: ஒருவரை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களுடைய எண்ணங்களுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் கூறுவதைக் கேட்பது அவசியம். அதிகமாக காதை தீட்டிக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்பதும், நாம் குறைவாகப் பேசுவதும் முக்கியம்.
ஆழமான தொடர்புகளை உருவாக்குதல்: மற்றவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவதன் மூலம் நாம் நேரடியாக நிலைமையை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தவறான தகவல் தொடர்புகளைத் தடுத்து ஆழமான புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.
தகவல் தொடர்பு அவசியம்: ஒருவரை சரியாகப் புரிந்து கொள்வதற்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது. இதனால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடிவதுடன், மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது. திறம்பட தொடர்பு கொள்ள எளிமையான மற்றும் சுருக்கமான மொழியைப் பயன்படுத்துவதும், மனம் திறந்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதும் தகவல் தொடர்புக்கு மிகவும் அவசியம்.
வெளிப்படையான பேச்சு: நாம் என்ன நினைக்கிறோம், என்ன விரும்புகிறோம் என்பதை மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் நம்மைப் பற்றிய புரிதலை உருவாக்க முடியும். வெளிப்படையான பேச்சு நம்பிக்கையையும், புரிதலையும் உருவாக்கும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான பேச்சு அவசியம். அதற்கென நேரத்தை ஒதுக்கி முயற்சி எடுப்பது சிறந்த பலனைத் தரும்.