நாம் பிறந்த உடனே முதலில் உட்கொள்ளும் தாய்ப்பால் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. தாய்ப்பாலை தவிர, பெரும்பாலான குழந்தைகளுக்கு பசும்பாலே முக்கிய உணவாக விளங்குகிறது. பாலில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் டி, கனிமங்கள் மற்றும் புரதம் ஆகியவை நிறைந்துள்ளன.
இவை எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, தசை இழப்பு அபாயத்தையும் பெருமளவு குறைக்கிறது. வழக்கமான பசும்பாலைத் தவிர சத்தான பால் தரும் இன்னும் பிற விலங்குகளின் பால் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எருமை: போவிடே குடும்பத்தைச் சேர்ந்த எருமை மாடுகளும் பசுக்களைப் போலவே ஊட்டச்சத்து மிக்க பாலை வழங்குகின்றன. எருமைப் பாலில் புரதமும் கொழுப்பும் அதிகம் உள்ளதால் இது பாலாடைக் கட்டி, தயிர் மற்றும் கிரீம் தயாரிப்பதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. எருமை பாலை உட்கொள்ளும்போது நிறைவான உணர்வை கொடுக்கும் என்பதால் நாள் முழுவதும் அதிகப்படியான உணவு உட்கொள்வது குறைந்து எடையை குறைப்பதற்காகவும் எருமை பால் மிகவும் சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது.
2. வெள்ளாடு: எளிதில் ஜீரணமாகக்கூடிய ஆட்டுப்பாலில் கொழுப்பு, கலோரிகள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஆட்டுப்பால், பசுவின் பாலை விட கெட்டியாகவும் கிரீமியாகவும்இருப்பதோடு, வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது குழந்தைகளில் கண்புரை, தட்டம்மை மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. செம்மறி ஆடு: செம்மறி ஆடுகளின் பாலில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மைக்ரோமினரல்கள் நிறைந்துள்ளன. பசுக்கள், எருமைகள் அல்லது ஆடுகளின் பாலை விட இவற்றின் உள்ளடக்கம் மிக அதிக அளவில் உள்ளது. ஆட்டுப் பாலில் பசுவை விட 36 சதவிகிதம் அதிக கால்சியம் உள்ளது. செம்மறி ஆடுகளின் பால் பொதுவாக பாலாடைக்கட்டி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
4. ஒட்டகம்: ஒட்டகப் பால் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. இதில் அதிக அளவு லாக்டோஃபெரின் மற்றும் வைட்டமின் சி உள்ளதால், பசும்பாலுடன் ஒப்பிடுகையில் இவற்றின் பாலில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளதோடு கூடுதலாக, லாக்டோஸ் நிறைந்துள்ளது.
5. கழுதை: கழுதை பால் மனித பாலை ஒத்த கலவை கொண்டது. ஆராய்ச்சியின்படி, பசுவின் பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கழுதைப் பாலை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது குறைந்த கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சியிலிருந்து பாதுகாப்பதோடு, பல்வேறு நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
மேற்கூறிய ஐந்து விலங்குகள் பாலிலும் சத்துக்கள் அதிக அளவில் நிரம்பி காணப்படுவதால் ‘பசு பால் தரும்’ என்ற கூற்றோடு இந்த ஐந்து விலங்குகளின் பெயர்களையும் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.