
இந்துக்களின் மிகப்பெரும் பண்டிகை என்றால் அது தீபாவளிதான். அதை சந்தோஷமாகக் கொண்டாட நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
தீபாவளிக்கு பலகாரம் செய்வதற்கு பொருட்கள் வாங்குவதிலிருந்து துணிமணிகள் வாங்குவது வரை அனைத்தையும் தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எந்தப் பொருட்களையும் விடாமல் வாங்கலாம். அடிக்கடி கடைக்குப் போகும் வேலையும் குறையும் அல்லது ஆர்டர் செய்தால் அவர்களே வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுப்பதும் இல்லாமல் ஒரே வழியில் எல்லாவற்றையும் முடித்து விடலாம். இதற்கான நேரம் மிச்சமாகும். மேலும், பொருட்களை ஒருசேர வாங்கும்பொழுது பணம் எவ்வளவு செலவாகிறது என்று சரியாகக் கணக்கு போட முடியும். பொருட்களை சரிபார்த்து வாங்கி வர முடியும்.
அதேபோல், துணிமணிகள் வாங்கும்போதும் எவ்வளவு ரூபாய்க்குள் வாங்க வேண்டும், பட்டாசு வாங்க எவ்வளவு செலவாகும் என்று ஒவ்வொரு பொருளுக்கும் கணக்குப் போட்டு வைத்தால் வாங்கும்போது அந்தந்த கவுண்டருக்கு சென்று சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்கி வரலாம். இதனால் அதிகம் பேரம் பேசுவது இருக்காது, கால தாமதமும் ஆகாது.
எந்தக் கடைக்குப் போகலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வைப்பது சாலச் சிறந்தது. வீட்டில் வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்களின் விருப்பத்தை அறிந்து எந்த கலர், எந்த வகையிலான புடைவை அணிய விரும்புகிறீர்கள் என்று கேட்டு அதற்குத் தகுந்தாற்போல் வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உடுத்தும்போது சிரமமின்றி உடுத்திக் கொள்வார்கள். குறிப்பாக, பட்டாசு வெடிக்கும்பொழுது உடுத்துவதற்குத் தனியாக காட்டன் துணிமணிகளை வாங்கி வைத்து விடுங்கள். அது மிக மிக அவசியம்.
பூஜைக்குரிய சாமான்களில் இருந்து, பலகாரம் செய்து மற்றவர்களுக்கு வைத்துக் கொடுக்கும் கவர்கள் வரை எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துக் கொண்டால் பலகாரங்களை வைத்துக் கொடுப்பதற்கும், பூஜை செய்வதற்கும் வசதியாக இருக்கும்.
அதேபோல், வீட்டில் எப்பொழுதுமே வேலை செய்யும் பெண்மணிகளுக்கு பண்டிகை காலம் வந்து விட்டால் இன்னும் அதிகமாக வேலை இருக்கும். அப்பொழுது உதவி செய்வதற்கு முதியோர்களுக்கும் லட்டு பிடிப்பது போன்ற வேலைகளைக் கொடுக்கலாம். உட்கார்ந்து கொண்டு பிடிப்பதை அவர்களும் விரும்பி செய்வார்கள். அதேபோல், வீட்டில் உள்ள வளர்ந்த குழந்தைகளுக்கும் வேலைகளை ஒதுக்கிச் செய்யச் சொல்லலாம். பட்டாசு வெடித்த பிறகு அவற்றை பக்கெட் தண்ணீரில் போட்டு அப்புறப்படுத்துவது வரை குழந்தைகளைச் செய்ய விட்டால் அவர்களும் உற்சாகமாக செய்வார்கள்.
வீட்டு வேலைக்காரர்களுக்கு முன்கூட்டியே துணிமணிகளோ, பண உதவியோ செய்துவிட்டால் அவர்களும் நேரத்தே அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். காலம் கடத்தாமல் அவரவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவது நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக தீபாவளி பலகாரங்களைக் கொடுப்பதற்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று கொடுங்கள். அவர்களின் கையால் கொடுக்கும்பொழுது மிகவும் உற்சாகமாகக் காணப்படுவார்கள். அவர்களும் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு பாடமாக இந்த நேரத்தில் கற்றுக் கொள்வார்கள். இதுபோல் திட்டமிட்டு செய்தால் பண்டிகை சிறக்கும். எல்லோருமே அமைதியாக பதற்றம் இல்லாமல் பண்டிகையைக் கொண்டாடி மகிழலாம்.