
தமிழகத்தின் சில கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. காரணம், அந்த கிராமங்களுக்கு விருந்தாளியாக வரக்கூடிய பறவைகளுக்கு இடையூறு எதுவும் நேரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த கிராமங்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை. இந்த கிராமங்களில் உள்ள பறவைகள் அல்லது வௌவால்களின் நலன் கருதி பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
1. பெரம்பூர்: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் வளர்ந்து நிற்கும் வேம்பு மற்றும் புளிய மரங்களில் நத்தைகொத்தி, நாரை, கொக்கு, பாம்புத்தாரா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பறவைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றின் நலனுக்காக பட்டாசுகள் வெடிப்பதில்லை. இதேபோல சீர்காழி அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில், வௌவால்களை பாதுகாப்பதற்காக 3 தலைமுறைகளாக பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
2. வெள்ளோடு (ஈரோடு): இப்பகுதி ஒரு பறவைகள் சரணாலயம் என்பதால், பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசுகள் வெடிக்காமலேயே தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பட்டாசுகளை விட இந்தப் பறவைகள்தான் அவர்களின் ஊருக்கு அழகைத் தருகின்றன என்று அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வெள்ளோட்டை சுற்றியுள்ள 6 கிராமங்களும் பட்டாசு வெடிப்பதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
3. வேட்டங்குடி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தின் பறவைகள் சரணாலயத்துக்கு உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல்நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரளி, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொக்கு உள்ளிட்ட 217 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. பறவைகளுக்கு சிறிதும் தொந்தரவு தரக் கூடாது என்று கருதும் கிராம மக்கள் 50 வருடங்களாக மேளதாள இசையையோ, ஒலி பெருக்கியோ, பட்டாசுகள் வெடிப்பதையோ செய்வதில்லை.
4. வேடந்தாங்கல்: தமிழகத்தின் பிரபலமான பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல். மதுராந்தகம் அருகே சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வந்து இனப்பெருக்கம் செய்து நாடுகளுக்குத் திரும்புகின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் மட்டுமே இப்படிப் பறவைகள் வலசை வருவதால் இப்பகுதியில் 1972ம் ஆண்டு பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்தது. மக்கள் சட்டத்திற்காக மட்டுமல்லாமல், பறவைகள் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
5. வௌவால் தோப்பு: சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே உள்ள வௌவால் தோப்பு கிராமத்திலும் பட்டாசுகள் வெடிப்பதில்லை. அங்குள்ள ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் தொடர்ந்து 75 ஆண்டுகளாக தங்கி வருகின்றன. இதனாலேயே இந்த கிராமத்திற்கு ‘வௌவால் தோப்பு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள மக்கள் சிலர் வௌவால்களை தெய்வமாகவும் வழிபடுகின்றனர்.
6. கூந்தன்குளம்: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. குறிப்பாக, நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், ரஷ்யா, சைபீரியா, மத்திய ஆசியா, வட இந்திய பகுதிகளில் இருந்து கூந்தன்குளம் வரும் பறவைகள் அங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் நவம்பர் மாதத்தில் வந்து ஜூன் மாதத்தில் சொந்த இடம் திரும்புகின்றன. இதனால் இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு 43 வகைக்கும் மேலான நீர்ப்பறவை இனங்கள் பராமரிக்கப்படுகின்றன.
7. வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி, அக்ரஹார நாட்டாமங்கலம், மருமந்துறை ஆகிய மூன்று கிராமங்களிலும் ஏராளமான பழந்தின்னி வௌவால்கள் வசிக்கின்றன. இவை இரவு நேரங்களில் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு இரைதேடி செல்லும் வௌவால்கள், பகல் நேரங்களில் மரங்களில் தொங்கி ஓய்வெடுக்கின்றன. இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பதையோ, இரைச்சலுடன் கூடிய ஒலிபெருக்கிகளையோ பயன்படுத்துவதில்லை.