கேஸ்லைட்டிங் என்பது உளவியல் ரீதியாகக் கையாளும் ஒரு தந்திரம். இதில் ஒரு நபர் அல்லது குழுவினர், பிறரின் உணர்வுகள், நினைவுகள் அல்லது எதார்த்தத்தை சந்தேகப்பட வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். பெரும்பாலும் பொய் சொல்வது, உண்மைகளை மறுப்பது, பாதிக்கப்பட்டவருக்கு குழப்பம் ஏற்படுத்துவது, சுய சந்தேகத்தை உருவாக்குவது போன்றவை அடங்கும். பணியிடத்தில் கேஸ்லைட்டிங் பிரச்னையை எதிர்கொள்ள உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கேஸ்லைட்டிங் - ஒரு உதாரணம்: ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் சாரா என்பவர் மிகவும் திறமைசாலி. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிபவர். உடன் வேலை செய்யும் ரமேஷ் தந்திரமான குணத்துக்கு சொந்தக்காரர். அவர்களது மேலாளர் ஒரு குறிப்பிட்ட புராஜெக்ட்டிற்கு புதுமையான யோசனைகளை சொல்லும்படி கூறினார். சாராவும் ரமேஷும் விவாதித்துக் கொண்டிருக்கும்போது சாரா நிறைய புதிய ஐடியாக்களை அவரிடம் சொல்கிறார். அடுத்த நாள் சாரா வரும் முன்பே ரமேஷ் மேலாளரிடம் சென்று, சாரா சொன்ன அத்தனை ஐடியாக்களையும் தன்னுடையது போல சொல்கிறார். இதை அறிந்த சாரா, அவரிடம் சண்டை போடும்போது, ‘இது அத்தனையும் என்னுடையது’ என்கிற ரமேஷ், ‘சாரா பொய் சொல்பவர், பிறருடைய ஐடியாக்களைத் திருடுபவர்’ என்று அலுவலகம் முழுவதும் பொய்யான தகவலைப் பரப்பி விடுகிறார். இதனால் சாராவுக்கு மன நிம்மதி குறைந்து வேலையில் கவனம் சிதறுகிறது
உள்ளுணர்வை நம்புதல்: பணியிடத்தில் கேஸ்லைட்டிங் பிரச்னையை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். குழப்பமாக உணர்ந்தால், எதார்த்தம் அல்லது நினைவகத்தை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். முதலில் தன்னை ஒருவர் தனது உள்ளுணர்வை நம்ப வேண்டும். அப்போதுதான் பிறருடைய குழப்பம் தரும் நடவடிக்கைகளில் இருந்து வெளிவர முடியும்.
எழுதுதல்: பிறர் கேஸ்லைட்டிங் தொல்லையை ஏற்படுத்தினால் அந்த நிகழ்வு நடந்த நேரம், தேதி, யார் குற்றம் சாட்டினார்கள், நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதைக் கவனித்து அதை அப்படியே ஒரு நோட்டில் அல்லது கணினியில் வெளிப்படுத்தி பதிந்து வைக்க வேண்டும். பின்னாட்களில் இது ஆதாரத்திற்குப் பயன்படும்.
ஆதரவு: கேஸ்லைட்டிங் ஒரு குறிப்பிட்ட தனிநபரிடமிருந்து வருகிறதா அல்லது பரந்த பணியிடக் கலாசாரத்தில் இருந்து வருகிறதா என்பதை தீர்மானிக்கவும். ஆதரவான மற்றும் நேர்மையான நடத்தையை வெளிப்படுத்தும் சக ஊழியர்கள் அல்லது மேற்பார்வையாளர்களின் உதவியை நாட வேண்டும். நம்பகமான சக ஊழியர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு இதற்கு மிகவும் அவசியம்.
அமைதியைப் பேணுதல்: பிறரிடம் பேசும்போதும், தொடர்புகொள்ளும்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பழி வாங்குதல் அல்லது உணர்ச்சி பொங்க பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அமைதியான நடத்தையை பின்பற்றினால் கேஸ்லைட்டிங் செய்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு எதிராகக் குறைவாக இருக்கும்.
புகாரளித்தல்: துன்புறுத்தல் மற்றும் நச்சுத்தன்மை குறித்த பணியிடக் கொள்கைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இதேபோன்று கேஸ்லைட்டிங் பிரச்னை தொடர்ந்தால் ஹெச்.ஆர். அல்லது மேலதிகாரியிடம் முறையாக புகார் அளிக்க வேண்டும். நிகழ்வுகளை தெளிவாகவும் உண்மையாகவும் முன்வைக்க வேண்டும். நிர்வாகத்திடம் இருந்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் பிற வேலை வாய்ப்புகளை நாடிச் செல்லலாம். இது ஒருவரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பாதுகாக்கும்.
மீள்திறனுக்கான பயிற்சிகள்: பிறர் தரும் கேஸ்லைட்டிங் அழுத்தத்தினால், பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படும். அவற்றை எதிர்கொள்ள மன அழுத்த மேலாண்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தியானம், விரும்பும் பொழுதுபோக்கு போன்றவற்றில் கவனம் செலுத்தி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.