ஃபோபியா (Phobia) என்பது ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தால் மனதில் ஏற்படும் ஒருவித தேவையற்ற அச்ச உணர்வாகும். ஃபோபியா என்பது ‘போபோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான சொல்லாகும். இதற்கு பயம், அச்சம், திகில் என்று பொருள்.
ஃபோபியா என்றால் சுருக்கமாக ஏதாவது ஒன்றைக் கண்டு தேவையின்றி ஏற்படும் அச்ச உணர்வாகும். உதாரணமாக, சிலருக்கு விமானத்தில் பயணிப்பது என்றால் மனதில் ஒருவித பய உணர்வு ஏற்படும். அதில் பயணிப்பதன் மூலம் நமக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்று அவர் மனதில் தேவையின்றி ஏற்படும் அச்ச உணர்வே ஃபோபியா எனப்படுகிறது. சிலருக்கு இருட்டைக் கண்டால் இனம் புரியாத ஒருவித பய உணர்வு மனதில் தோன்றும். சிலருக்கு கரப்பான்பூச்சி முதலான சிறு உயிரினங்களைக் கண்டாலே பயம் தோன்றிவிடும்.
டென்டோஃபோபியா (Dentophobia) என்பது பல் மருத்துவரிடம் பல் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் மனதில் உருவாகும் ஒருவித அச்ச உணர்வாகும். டென்டோஃபோபியா பலருக்கும் உள்ளது என்பது ஒரு பொதுவான தகவலாகும். பல் மருத்துவர் என்றாலே அவர் செய்யும் பல் சிகிச்சை வழிமுறைகள் மிகுந்த வலியை ஏற்படுத்தும் என்ற ஒருவித அச்ச உணர்வு பலருக்கும் காலம்காலமாக இருந்து வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. சிறு வயதில் தோன்றும் இந்த அச்ச உணர்வு வயதான பின்னரும் மனதிலிருந்து நீங்குவதில்லை என்பதே உண்மை.
பல் வலி ஏற்பட்டதும் பல் மருத்துவரை சந்தித்து அதற்கான உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். டென்டோஃபோபியாவின் காரணமாக ஏற்படும் பய உணர்வால் பல் மருத்துவரை சந்திப்பதை தள்ளிப் போட்டால் சிறிய பல் பிரச்னையானது பெரிய பிரச்னையாக உருவாகி அதனால் செய்யப்படக்கூடிய சிகிச்சையும் பெரிய அளவில் உருவாகக் கூடும்.
கடுமையான பல் வலியின் காரணமாக சிலர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பல் மருத்துமனைக்குச் சென்று பல் மருத்துவம் செய்துகொள்ள டென்டல் சேரில் படுத்தவுடன் தங்களையும் அறியாமல் அவர்களுக்குப் படபடப்பு ஆரம்பித்து விடும். பல் மருத்துவர் தனது உபகரணங்களை தயார் செய்யத் தொடங்கியதும் பய உணர்வு இன்னும் அதிகரித்து விடும்.
பல் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றதும் டென்டோஃபோபியாவின் காரணமாக ஒருவருக்கு இதயத்துடிப்பு சற்று அதிகரிக்கலாம். வியர்க்கலாம். உடலில் ஒருவித நடுக்கம் ஏற்படலாம். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். பதற்றமும் ஏற்படலாம். இவையெல்லாம் டென்டோஃபோபியாவின் அறிகுறிகளாகும்.
தற்காலத்தில் பல் மருத்துவ சிகிச்சையானது மிகவும் நவீனமடைந்து விட்டது. பல் மருத்துவ நிபுணர்களால் ஒரு சிறு துளி அளவும் வலி இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேர் சிகிச்சை முதலான ஒரு மணி நேரம் நடைபெறும் சிகிச்சைக்கு முன்னால் தேவையான அளவிற்கு மயக்க மருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சை மேற்கொள்ளும்போது ஒரு சிறு துளி வலி கூட தெரியாது. பல் மருத்துவ சிகிச்சையின்போது வாயை அரை மணி முதல் ஒரு மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் வலி இருக்காது. ஆனால், ஒருவித அசௌகரியம் ஏற்படும். முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் பிறகு நிம்மதியாக சாப்பிடலாம், உறங்கலாம்.
தேவையின்றி பயன்படுவதன் காரணமாக பிரச்னை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். தற்காலத்தில் நீங்கள் பல் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றால் அவர் முன்பாகவே தான் செய்யப் போகும் சிகிச்சையைப் பற்றி விளக்கி விடுவார். சிகிச்சை எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் வலி இல்லாமல் சிகிச்சை செய்யப்படும் என்பதையும் எடுத்துக் கூறுவார்.
பல் சிகிச்சை என்பது வலி மிக்கது என்பதை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளாதீர்கள். தற்காலத்தில் பல் மருத்துவத் துறை மிகவும் நவீனமயமாகிவிட்டது. வலியற்ற லேசர் சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
ஒரு முறை தைரியமாக பல் மருத்துவரிடம் சிகிச்சை செய்து பாருங்கள். பிறகு பல் சிகிச்சை என்பது நூறு சதவிகிதம் வலியற்ற ஒரு சிகிச்சை என்பது உங்களுக்குப் புரிந்து விடும். டென்டோஃபோபியா உங்களை விட்டுப் போயே போய்விடும்.