
மழைக்காலம் வந்துவிட்டாலே விஷ ஜந்துக்களின் பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதிலும் தனி வீட்டில் இருப்பவர்கள் தோட்டம் அதில் வளர்ந்த செடி, கொடிகள் மட்டுமில்லாமல், போர்வெல் போட்டிருந்தால் அதையும் தினமும் கண்காணித்து வரவேண்டும். இல்லையேல் போர்வெல் சேம்பருக்குள் அதன் பக்கவாட்டில் எப்படியாவது ஓட்டை போட்டுக் கொண்டு எலிகள் மண்ணை சேமித்து வைத்துவிடும். போர்வெல் பைப்புகளின் மீதும் மண்ணை போட்டு மூடி விடும்.
நாம் மோட்டார் போட்டுவிட்டு அது ஓவர்ஃப்ளோ ஆகும்போது தண்ணீரைத் திறந்தால் மண்ணோடு சேர்ந்து தண்ணீர் வருவதைக் காண முடியும். எல்லாம் பெருச்சாளியின் வேலைதான். இதை சற்று கவனிக்காமல் விட்டு விட்டால் போர்வெல் தூர்ந்து, பிறகு அதை தூர்வாருவதற்கு வழிவகை செய்ய வேண்டி இருக்கும். அதனால் அவ்வப்பொழுது போர்வெல் சேம்பரின் மூடியை திறந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை நோட்டமிட வேண்டும்.
குறிப்பாக, மழைக்காலத்தில் போர்வெல் இருக்கும் இடத்தில் காலை வைத்தால் கால் கீழே அமுங்கி குழியாகி விடும். அதுபோல் இருந்தால் கட்டாயமாக போர்வெல் சேம்பரின் மூடியைத் திறந்து பார்த்தே ஆக வேண்டும். பெருச்சாளி எப்படியாவது ஓட்டை போட்டு விடும்.
அதில் மணல் நிரம்பி இருந்தால் அவற்றை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு போர்வெல்லை சுற்றிலும் ஜல்லிக் கலவையை அதில் நன்றாக கொட்டி மூடி விட வேண்டும். குறிப்பாக, போர்வெல் பைப்பு வெளியில் வரும் இடத்தில் ஓட்டை பெரிதாக இல்லாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும். அதன் வழியாகவும் பெருச்சாளி உள்ளுக்குள் வந்துவிடும்.
அதேபோல், மழைக்காலத்தில் மிகப்பெரிய தொந்தரவாக இருப்பது பாம்புகள். சின்னச் சின்ன குட்டிகள் முதல் பெரிய நீர்சாரை வகை பாம்பினங்கள் வீட்டுப் பக்கம் ஒதுங்கும். ஆதலால் பாம்பு பிடிப்பவர்களின் போன் நம்பரை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அவர்களுக்கு போன் செய்தால் அவர்கள் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
மழைக்காலத்தில் தோட்டத்தை எப்படி சுத்தம் செய்தாலும்எங்காவது இருந்து பாம்புகள் வந்துவிடும். இங்கிருந்தும் மற்றவர்கள் வீட்டுக்கு அவை போவது உண்டு. ஆதலால் கிச்சனை ஒட்டி மரங்கள் இருந்தால் சமையல் முடிந்தவுடன் ஜன்னலை சாத்தி வைத்து விடுவது நல்லது. ஜன்னலை ஒட்டிய மரங்களின் கிளைகளை வெட்டி விடுவது அவசியம். அதேபோல், மதில் சுவரின் மீது குழந்தைகளை உட்கார வைத்து சிலர் சாப்பாடு ஊட்டுவார்கள். அதையும் மழைக்காலத்தில் செய்யாமல் இருப்பது நல்லது.
குறிப்பாக, வீட்டுத் தோட்டத்தில் மழை நீர் தேங்காதபடி அதற்கான வடிகால் வசதியை செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அதில் தவளைகள் இருக்காது. இல்லையென்றால் அவை வேறு கூப்பாடு போட்டு பாம்புகளை வரவழைத்து விடும். ஆதலால் வீட்டைச் சுற்றிலும் கல் உப்பை அதிகமாகப் போட்டு வைத்தால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்கலாம். குறிப்பாக, வீட்டைக் கழுவி தண்ணீர் செல்லும் வழிகளை எல்லாம் அடைத்து வைத்து விடுவது மிகவும் முக்கியம். வலைக்கம்பிகளை ஜன்னல் கதவுகளில் போட்டு வைத்தால் கொஞ்சம் பாதுகாப்பு கிடைக்கும்.
தேங்காய்களைப் பறித்து எண்ணெய் ஆட்டுவதற்காக அப்படியே காய போட்டு வைத்தாலும், குவியலாக வைத்தாலும் அதற்குள்ளும் பாம்புகள் இருக்கும். ஆதலால் மழைக்காலத்தில் வெளியில் வரும்பொழுது குச்சி இல்லாமல் நடக்காதீர்கள்.