
இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்கு வேப்பெண்ணெய், எலுமிச்சம் பழம், துளசி, கற்பூரம், பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவை ரசாயன கொசு விரட்டிகளுக்கு மாற்றாக இருப்பதுடன், பாதுகாப்பான மற்றும் மலிவான மாற்று வழியாக உள்ளது. வீட்டிலேயே இவற்றை சுலபமாக உபயோகித்து கொசுக்கள் இல்லாத சூழலை உருவாக்கலாம். இவற்றில் பலவும் கிருமிநாசினி மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டிருப்பதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக உள்ளது.
1. வேப்பெண்ணெய்: வேப்பெணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் தடவுவது ஒரு சிறந்த இயற்கை கொசு விரட்டியாகும். வேப்ப எண்ணெய்க்கு பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பூச்சிக்கொல்லிப் பண்புகள் உள்ளன. அதிகம் வேண்டாம் ஜஸ்ட் 2 துளிகள் வேப்பெண்ணெயுடன் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.
2. துளசி செடி: துளசி செடி ஒரு சிறந்த இயற்கை கொசு விரட்டியாகும். வீடுகளில் துளசி செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வாசனை மூலம் கொசுக்களை எளிதாக விரட்டலாம். துளசியில் உள்ள லினலூல் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற எண்ணெய்கள் கொசுக்களுக்கு எதிராக நச்சுத்தன்மையும், விரட்டும் தன்மையும் கொண்டவை. துளசி ஒரு சுவையான மூலிகை. இந்த செடியின் இலைகளை கொசு லார்வாக்கள் உண்ணும் பொழுது இறக்கின்றன. எனவே, வீட்டிற்குள்ளும் நுழைவாயில்களுக்கு அருகிலும் ஒன்றிரண்டு துளசி செடிகளை வளர்க்கலாம்.
3. எலுமிச்சம் பழம்: எலுமிச்சம் பழத்தின் வலுவான வாசனை கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் ஐந்தாறு கிராம்புகளை குத்தி வைக்க அதன் வாசனை கொசுக்களை விரட்டி விடும். எலுமிச்சம் பழ எண்ணெய் கலந்த மெழுகுவர்த்திகளை பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தி எரியும்பொழுது வெளியாகும் நறுமணம் கொசுக்களை விரட்டும். எலுமிச்சம் பழ எண்ணெய் (lemongrass) கொசு விரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.
4. கற்பூரம்: கற்பூரத்தின் காட்டமான நெடி, அதாவது நறுமணம் கொசுக்களை விரட்டும். ஒரு பாத்திரத்தில் சில கற்பூரத் துண்டுகளை வைத்து கொளுத்தி விட அவற்றின் புகை அறை முழுவதும் பரவ, கொசுக்கள் பறந்தோடி விடும்.
5. பூண்டு: கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு பற்களை நன்கு நசுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை ஆறிய பின்பு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் தெளிக்கலாம் அல்லது பூண்டுடன் நான்கைந்து கிராம்புகளையும் சேர்த்து நசுக்கி தண்ணீரில் போட்டு அறையின் மூலைகளில் வைத்து விடலாம் அல்லது ஜன்னல்களைச் சுற்றி தெளித்து விடலாம். அதன் வாசனை கொசுக்களை வீட்டுக்குள் அண்ட விடாமல் செய்து விடும்.
6. சாமந்திப்பூக்கள்: இவற்றின் இயற்கையான மணம் கொசுக்களுக்குப் பிடிக்காது. மேலும், அவற்றின் பூக்களில் உள்ள பைரெத்ரம் (pyrethrum) என்ற கலவை பல கொசு விரட்டி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. கொசுக்களை விரட்ட தோட்டத்தில் மற்றும் ஜன்னல்கள், பால்கனிகளில் சாமந்திச் செடிகளை வளர்க்கலாம். சாமந்திப் பூக்களும் கொசுக்களை விரட்டும். வீட்டில் துளசி, சாமந்தி, நொச்சி போன்ற செடிகளை வளர்த்து அவற்றின் வாசனையால் கொசுக்களை விரட்டலாம். சாமந்தி, துளசி, நொச்சி போன்ற செடிகளை உட்புறத் தாவரங்களாக வீட்டிற்குள் வளர்ப்பதும் நல்ல பலனைத் தரும்.
7. காபித்தூள்: காபித்தூளை எரிப்பதன் மூலம் வெளியாகும் நறுமணம் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்டும். இதை கிராம்புகளுடன் சேர்த்து எரித்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் இருந்தால் அதில் 2 ஸ்பூன் அளவில் காப்பித்தூளை சேர்த்து விடவும். ஆக்சிஜன் இல்லாமல் தண்ணீரில் உள்ள கொசு முட்டைகள் மேற்பரப்பில் உயர்ந்து அழிந்துவிடும்.
8. மண்ணெண்ணெய் வைத்தியம்: மண்ணெண்ணெய் கொசுக்களை நேரடியாக விரட்டாது. ஆனால், அதை ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தி வேப்ப எண்ணெயில் கலந்து மண்ணெண்ணெய் விளக்கில் எடுப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். தண்ணீரில் மண்ணெண்ணையின் மெல்லிய அடுக்கு கொசு லார்வாக்களின் சுவாசத்தை தடுத்து அழிக்கும். தண்ணீர் தேங்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணெயை தெளித்து விட கொசுக்கள் உற்பத்தி ஆகாது.
9. லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய்: கொசுக்கள் இதன் வாசனையை விரும்புவதில்லை. எனவே, இவற்றை நம் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் சிறிதளவு தெளிக்கலாம். உடலில் சிறிதளவு தடவிக் கொள்ளலாம். தேயிலை மர எண்ணெயில் பல பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு தண்ணீர், சில துளிகள் தேயிலை மர எண்ணெய் கலந்து வீட்டைச் சுற்றிலும் தெளிக்க கொசுக்கள் உற்பத்தியாகாது.
10. புதினா: இதன் நறுமணத்தையும் கொசுக்கள் விரும்புவதில்லை. அவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கையால் நன்கு கசக்கி அறையில் மூலைகளில் வைக்கலாம் அல்லது புதினா எண்ணெயை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வீடு முழுவதும் தெளிக்கலாம். புதினா செடிகளை வளர்ப்பதும் நல்ல பலனைத் தரும்.