
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க அனைவருக்கும் ஆசை உண்டு. சின்ன ஊசி வெடி முதல் பெரிய ஆட்டம் பாம் வரை வெடிக்க ஆசைதான். காசை இப்படி கரியாக்கலாமா என்று யோசிக்க வேண்டாம். காரணம் பட்டாசு வாங்கி வெடித்தால்தான் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலருக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும். நிறைய மக்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக உள்ளது. எனவே, குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் அதிக மாசுபடுத்தாத தன்மை கொண்ட பட்டாசுகளை வாங்கி வெடிக்கலாம்.
அது சரி, பட்டாசுகளின் விலை ரொம்பவே அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படுகிறீர்களா? மொத்தமாக குறைந்த விலையில் வாங்குவதற்குரிய இடங்கள் நிறைய உள்ளது. அங்கு வாங்கிப் பயன் பெறலாம். சில இடங்களில் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கினால் இலவசமாக டோர் டெலிவரியும், எக்ஸ்ட்ராவாக சில வெடிகளையும் தருகிறார்கள். தீபாவளி பட்டாசுகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்குவதற்கு அவை உற்பத்தி செய்யும் மையங்களில் நேரடியாக வாங்கலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனையாளர்களை அணுகுவது நல்லது.
சிவகாசி: சிவகாசி, விருதுநகர் மாவட்டங்கள் இந்தியாவின் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில்களுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இந்த நகரம் நாட்டின் பட்டாசு உற்பத்தியில் பெரும் பங்களிக்கிறது. நாட்டின் 70 சதவிகித பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளை இவை உற்பத்தி செய்கின்றன. 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் பட்டாசுகளின் தலைநகரான சிவகாசியில் நேரடியாக மொத்தமாக பட்டாசுகளை வாங்கலாம். இது விலையில் நன்மை பயக்கும். பட்டாசுகளின் தாயகமாக அறியப்படும் சிவகாசியில் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்கு பல கடைகள் உள்ளன. இவை குறைந்த விலையில் வாங்க சிறந்த இடமாக உள்ளன.
மொத்த விற்பனையாளர்கள்: நம் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொத்த பட்டாசு விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் நமக்கு நல்ல விலையில் அனைத்து வகையான பட்டாசுகளை வழங்குவதுடன், அதிரடி சலுகைகளும் தருகிறார்கள்.
ஆன்லைன் கடைகள்: சில ஆன்லைன் கடைகள் மொத்த விலையில் பட்டாசுகளை விற்பனை செய்கின்றன. அவற்றின் விலைகளை ஒப்பிட்டு, இலவச விநியோகம் போன்ற சலுகைகளையும் சரி பார்க்கலாம். ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம் தள்ளுபடிகள், கூப்பன் குறியீடுகள், நிறைய சலுகைகள் மற்றும் வீட்டு டெலிவரி போன்ற வசதிகளைப் பெறலாம். சில ஆன்லைன் கடைகளில் தனித்துவமான பட்டாசு பரிசுப் பெட்டிகளையும் பெறலாம்.
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: தீபாவளியை முன்னிட்டு பல கடைகள் சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குவதால் அவற்றையும் கவனத்தில் கொள்ளலாம். பட்டாசு வாங்கும் முன் பல்வேறு கடைகளுடன் ஒப்பிட்டு சிறந்த விலைகள் மற்றும் சலுகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.