புயல், கனமழை என பயமுறுத்தும் சமயங்களில் சேதத்தை தவிர்க்க அல்லது குறைக்க சில வழிகளைப் பின்பற்றலாம். அதிவேகமான காற்று வீசும் பொழுது மரங்கள், கிளைகள் உடைந்து சேதம் ஏற்படுத்தலாம். எனவே, மழைக்காலங்களில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பெரிய மரங்களின் கிளைகளை வெட்டி விடுதல், அடர்ந்த புதர்கள் இருப்பின் மொத்தமாக அகற்றுவது நல்லது.
வீட்டிற்கு வெளியே வெளிப்புறத்தில் வைத்திருக்கும் முக்கியமான பொருட்களை வீட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் குழந்தைகளின் சைக்கிள்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
வானிலை ஆய்வு மையங்கள் அறிவிக்கும் அறிவிப்பை உன்னிப்பாக கவனித்து அதிவேகமான காற்றோ, புயல் பாதிப்போ அறிவித்தால் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும், வீட்டில் உள்ள வயதான முதியவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்வதும் அவசியம்.
உணவு, மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளை போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது பற்றி திட்டமிடுதல் வேண்டும்.
அதிவேகமான காற்று, புயல் அறிவிப்பு இருந்தால் ஜன்னல் கதவுகளை சாத்தி வைப்பது, அவை அடிக்கும் காற்றில் அடித்துக் கொள்ளாமல் இருக்க உதவும். சரியாக மூடாத கதவுகள், ஜன்னல்களை சரி செய்து வைத்துக் கொள்வது காற்று வேகமாக வீசும் போது குப்பைகள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்க உதவும். மழைக்கு முன்பே இரு சக்கர வாகனங்களையும், கார்களின் டேங்குகளையும் பெட்ரோல் போட்டு நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது.
மொபைல் போன்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்வதும், இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்றவை இருந்தால் அதன் இயக்கத்தை சரிபார்த்து வைத்துக்கொள்வதும் அவசியம். மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக இயங்கும் வகையில் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.
இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் வசதி இல்லையெனில் மெழுகுவர்த்தி, விளக்குகளில் எண்ணெய் விட்டு வைப்பது மின்சாரம் துண்டிக்கப்படும் பொழுது உபயோகமாக இருக்கும். இரு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக வீட்டிற்குள் நிறுத்த முடியும் என்றால் வீட்டிற்குள் வைத்து விடலாம். கார்களை உயரமான இடங்களில், அருகில் பெரிய மரங்களோ, மின் கம்பங்களோ இல்லாத இடத்தில் நிறுத்தி வைப்பது பாதுகாப்பானது.
ஜன்னலருகில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றையும், கண்ணாடி பொருட்களையும் பாதுகாப்பான இடங்களில் மழை தண்ணீர் படாமல் பாதுகாப்பது நல்லது. முக்கியமான ஆவணங்கள், வங்கி பாஸ் புக்குகள், செக் புக்குகள், சொத்து பத்திரங்கள், கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை தண்ணீர் புகாதவாறு பாலித்தீன் கவர்களில் வைத்து பாதுகாப்பாக பெட்டிகளில் பத்திரப்படுத்துவது அவசியம்.
அத்தியாவசியமான பொருட்கள், பேட்டரிகள், பிரட், பிஸ்கட்டுகள், பழங்கள், எளிதில் கெட்டுப் போகாத உணவுகள், போதிய குடிநீர் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும். ஏடிஎம்மிலிருந்து போதுமான அளவிற்கு பணம் எடுத்து வைத்துக்கொள்வது அவசர தேவைக்கு உதவும்.