வைட்டமின்கள் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான கரிம சேர்மங்கள் ஆகும். வளர்சிதை மாற்ற செயல்முறைகள், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. வைட்டமின்களை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீரில் கரையக்கூடிய வைட்டமின்களின் பண்புகள்: பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நீரில் கரையக்கூடியவை.
உறிஞ்சுதல்: இவை இரைப்பைக் குழாயில் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டம் வழியாக திசுக்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் அதிக அளவில் சேமிக்கப்படுவதில்லை. அதிகப்படியான அளவு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவை போதுமானதாக இல்லாவிட்டால் ஆரோக்கியக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். அதனால் இந்த வகையான வைட்டமின்களை உணவின் மூலம் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியப் பங்கு: இவை பெரும்பாலும் உடலின் ஆற்றல், வளர்சிதை மாற்றம், இரத்த சிவப்பணு உருவாக்கம், நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு ஆதரவு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை வெப்பம், ஒளி மற்றும் காற்றுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்கலாம்.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் பண்புகள்: இவை பொதுவாக உணவுக் கொழுப்புக்களுடன் சேர்ந்து உறிஞ்சப்படுகின்றன. வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஆகும்.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு உணவில் கொழுப்பு தேவைப்படுகிறது. இவை பொதுவாக லிப்போ புரோட்டீன்கள் வழியாக இரத்தத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் அவை கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் சேமிக்கப்படும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்களை போல அடிக்கடி இவற்றை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் கண் பார்வைக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், இரத்த உறைதல் போன்ற செயல்பாடுகளுக்கும் முக்கியமானவை. இவை நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை விட நிலையானவை. சமைக்கும்போதும் மற்றும் சேமிப்பின்போதும் ஆற்றல் இழப்புக்கு ஆளாவது இல்லை.
நீரில் கரையும் வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருள்கள்: பழுப்பு அரிசி, ஓட்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள், பன்றி இறைச்சி, முட்டைகள், பால், தயிர், மெலிந்த இறைச்சி வகைகள், கீரை, புரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகள், கோழி, சால்மன், டுனா மீன்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள், அடர்ந்த இலை கீரைகள், அவகேடோ, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெரிகள், கிவி குடைமிளகாய் போன்றவை.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருள்கள்: வைட்டமின் ஏ சத்து அடங்கிய கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரைகள், முட்டைகள், வைட்டமின் டி சத்துள்ள கானாங்கெளுத்தி, மத்தி மீன், சோயா பாதாம், வைட்டமின் ஈ சத்துள்ள ஹேசல் நட்ஸ், சூரியகாந்தி விதைகள், சூரியகாந்தி எண்ணெய், ஆலீவ் எண்ணெய், புளித்த உணவுகள் போன்றவை.
நமது ஆரோக்கியத்திற்கு இரண்டு வகையான வைட்டமின்களும் மிகவும் அவசியம். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகளில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் புரதங்கள் அடங்கும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் எண்ணெய் வகைகள், மீன், பால், காய்கறிகள் அதிக கொழுப்புள்ள உணவுகளில் காணப்படுகின்றன.