ஞாபக மறதி - இது பொதுவாக எல்லோருக்கும் சில சமயங்களில் ஏற்படும். இன்னும் சிலருக்கு பல நேரங்களில் ஏற்படும் விஷயமாகும். வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் பொழுது நம்மிடம், ‘மாலை மறக்காமல் இதை வாங்கி வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புவார்கள். ஆனால், நாம் அதை மறந்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம், ‘மறந்து விட்டேன், ஞாபக மறதி அதிகமா இருக்கு. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று புலம்பித் தள்ளுவோம். இது சராசரியாக எல்லா குடும்பத்திலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
சரி, ஞாபக மறதிக்கு எதுவும் செய்ய முடியாதா? அதை எப்படித்தான் தீர்ப்பது? அதற்கு என்னதான் செய்ய வேண்டும்? என்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உங்கள் ஞாபக மறதியை மிகவும் சுலபமாக சரி செய்யலாம். அதை எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரும் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.
தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல, ஞாபக மறதி பிரச்னையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக, நினைவுத் திறனையும், மன நிலையையும் மேம்படுத்தும்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யலாம். பொதுவாக, எந்த வேலை செய்வதாக இருந்தாலும் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவோம். அதற்கு மாறாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல் திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் நல்ல பலன் கொடுக்கும். அவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.
இவற்றோடு உணவுக்கட்டுப்பாடும் மிகவும் அவசியமானது. சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவற்றை ஞாபகமாக மனதில் இருத்திக்கொண்டாலே உங்கள் ஞாபக மறதிக்கு எளிதாக ஒரு தீர்வு கிடைக்கும்.