
உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் இயற்கையாக அழுகும் பொருட்களை விரைவில் கெட்டுப் போகாமல் தடுப்பதற்காக குளிர்சாதனப் பெட்டிகள், பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அனைத்து வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் பயன்பாடு முக்கியமாக மாறிவிட்டது. வீட்டின் அத்தியாவசியத் தேவையான ஃப்ரிட்ஜ் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் பயன்பாட்டில் இருக்க சில முக்கியமான ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. சில வீடுகளில் ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கு முக்கியக் காரணம் மின் கசிவுதான். ஆதலால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை எலக்ட்ரீசியனை அழைத்து ஆட்டோமேட்டிக் கட் ஆப் மற்றும் ஒயரிங் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
2. ஃப்ரிட்ஜ் பின்புறம் உள்ள கேஸை கடத்த மெல்லிய பைப் லைன்கள் இருப்பதால், நாம் ஃப்ரிட்ஜை நகர்த்தும்போதும், அசைக்கும்போதும் அவற்றில் கீறல் விழுந்து கசிவு மற்றும் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக அதைக் கையாள வேண்டும்.
3. வீட்டின் தரையைத் துடைக்கும்போது மாப் ஃப்ரிட்ஜில் பட்டு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கைகளால் ஃப்ரிட்ஜுக்கு அடியில் சுத்தம் செய்ய வேண்டும்.
4. தினமும் ஃப்ரிட்ஜை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திறந்து மூட வேண்டும். நீண்ட நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியது இருந்தால், பொருட்களை வெளியே வைத்து ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து, லேசாக திறந்த நிலையில் வைக்க வேண்டும்.
5. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஃப்ரிட்ஜை நகர்த்தும்போது ஃப்ரிட்ஜிற்கு 30 நிமிடம் ஓய்வு கொடுத்து நகர்த்த வேண்டும். அதேபோல் அதனை ஆன் செய்யும் போதும் 30 நிமிடம் சீராக ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஆன் செய்ய வேண்டும்.
6. ஃப்ரிட்ஜை எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்து, ஃப்ரிட்ஜிற்கு பின்னால் சேகரமாகும் தண்ணீரை அவ்வப்போது எடுத்துவிட வேண்டும்.
7. ஃப்ரிட்ஜ் மேலே உணவுப் பொருட்கள், ஐயன் பாக்ஸ், செல்போன், அழகு சாதனப் பொருட்கள் என தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது.
8. ஃப்ரிட்ஜ் உட்புறத்தில் உள்ள ஸ்விட்சை முழுமையான அளவிற்கு கூட்டி வைக்கக் கூடாது. சீரான நேரத்தில் மட்டும் குளிர்ச்சி கொடுக்கும் வேகத்தில் உயர்த்த வேண்டும்.
9. ஏசி உள்ள அறையில் ஃப்ரிட்ஜை பயன்படுத்தக் கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள கம்பரசரை மாற்றவில்லை என்றாலும், அதில் உள்ள கேஸை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றுவது நல்லது.
10. ஃப்ரிட்ஜை வெப்பமான இடத்தில் வைக்கக் கூடாது. சுவருக்கும் - ஃப்ரிட்ஜிற்கும் இடையில் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
11. ஒருசில மருந்துகளில் குறைந்த அளவுக்கு ஆசிட் இருக்கும். எனவே, மருத்துவரிடம் முறையாகக் கேட்ட பிறகே ஃப்ரிட்ஜில் அவற்றை வைக்க வேண்டும்.
12. ஃப்ரிட்ஜுக்கு பின்னால் முக்கியமான ஒயரிங் சர்க்யூட் இருக்கும் என்பதால் ஷாக் அடிக்கும் வாய்ப்பு அதிகம். ஆதலால் சின்னக் குழந்தைகளை ஃப்ரிட்ஜ் அருகில் அனுமதிக்கக் கூடாது.
13. ஐஸ் அதிகம் கட்டியானால் உடனடியாக எலக்ட்ரீசியனை அழைத்து வந்து காட்டுங்கள். நீங்களாகவே கத்தி அல்லது ஸ்பூனை வைத்து உடைக்க முயலாதீர்கள்.
இதுபோல எளிமையான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றினாலே உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் பாதுகாப்பாக இருக்கும்.