சிறந்த பெற்றோரா நீங்கள் என்பதை அறிய சில எளிய ஆலோசனைகள்!

Happy Family
மகிழ்ச்சியான குடும்பம்
Published on

‘பிறக்கும்போது பிள்ளைகள் அனைவரும் நல்லவர்களே. பிரச்னைகள் எல்லாம் பெரியவர்களிடமே’ என்கிறார் பிரபல கல்வியாளர் மாண்டிசோரி. இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்தின் சிஇஓ உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தவர். ஆனால் அவர், ‘தனக்கு அதிகாரப் பதவியை விட, தாய் பதவியே முக்கியம்’ என்று கூறுகிறார். இதிலிருந்தே பெற்றோர்களின் பாத்திரம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பது விளங்கும்.

தம் பிள்ளைகளுக்கு ஒரே எண்ணத்துடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை தொடர்ந்து கொடுப்பவர்களே சிறந்த பெற்றோர்கள். தம் பிள்ளைகள் திறமையாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பெரியவர்கள் தகுந்த பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். அந்தப் பயிற்சிகள் பிள்ளைகளுக்கு, ‘தண்டனையாக’ இருக்கக் கூடாது. பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்றவிதமாக உள்ள முறைகளை சிந்தித்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொதுவாக, பிள்ளைகள் பெற்றோர்களை தனது முன்மாதிரியாக (role model) முதல் ஆசிரியராகக் கருதுகிறார்கள். பிள்ளைகளுடன் பேசும்போது விமர்சிக்காமல் பேச வேண்டும். ‘வாயை மூடிக்கொண்டு கேள். சொன்னதை செய்’ போன்ற வார்த்தைகளைச் சென்சார் செய்ய வேண்டும். ‘உன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் உன்னிடம் சொல்கிறேன்’ போன்ற நேரிடையான ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும் எந்த சூழ்நிலையிலும், எந்த கோணத்திலும் அவர்களை விமர்சனம் செய்யக் கூடாது.

பிள்ளைகள் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லும்போது பெரியவர்கள் நம்பவில்லை என்றால் அவர்கள் மனக்கவலை அடைவார்கள். உண்மையை சொல்லியும் நம்பாததால் கோபம் வந்து பொய்களைச் சொல்ல கற்றுக் கொள்வார்கள். ஆகவே, அவர்களை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். அதனால் பெரியவரான பிறகு நியாயமான முறையில் அவர்கள் நடந்து கொள்வார்கள்.

பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்குப் பிடிக்காத விஷயம். குறிப்பாக, சொந்த சகோதரன், சகோதரிகளுடன் கூட ஒப்பிடக் கூடாது. அவ்வாறு ஒப்பிடுவதால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. அது அண்ணன், தம்பிகளுக்கு இடையில் கூட பொறாமையை ஏற்படுத்தும். பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களை அருகில் அழைத்து இவ்வாறு செய்யக்கூடாது என மென்மையாக எச்சரித்தால் அவர்கள் மறுபடியும் அதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார்கள். பிள்ளைகளிடம் நட்புறவை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாக இருந்தால் அவர்களின் பிரச்னைகளைக் கூட பெற்றோருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
அதிக முதுகு வலியா? இவற்றை செய்தாலே போதுமே! 
Happy Family

எந்த விஷயமானாலும், யாருக்கானாலும் ஒருமுறை சொன்னால் போதும். கேட்கவில்லை என்றால் இரண்டாவது முறை சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் பத்து முறை சொன்னால் செய்பவருக்கு செய்யத் தோன்றாது. குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைப் பற்றி தாழ்வாகப் பேசாதீர்கள். அவ்வாறு பேசினால் நாளைக்கு உங்கள் பிள்ளைகளுக்கு பணம், பதவி இருந்தாலும் அன்புடன் பேசும் உறவினர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பெற்றோர்கள் செய்யும் வேலையில் நேர்மையாக இருந்தால் பிள்ளைகள் கூட அதே வழியில் நடப்பார்கள்.

பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை சொல்ல நினைக்கும் போது அதை சொல்வதற்கு சில முறைகள் உள்ளன. எந்தப் பிள்ளைக்கு எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முதலில் பிள்ளைகளின் மனதை படிக்க வேண்டும் . சில பிள்ளைகளுக்கு செய்துகாட்டிச் சொல்ல வேண்டும். சில பிள்ளைகளுக்கு கதைகளின் மூலம் சொல்ல வேண்டும்  சிலருக்கு பாடல்கள், செய்யுள்கள் மூலமாக சொல்ல வேண்டும். சிலருக்கு சிறிய சிறிய காட்சிகள் மூலம் சொல்ல வேண்டும். எதை எப்படிச் சொன்னாலும், ‘பெற்றோர்களுக்கு நான் என்றால் மிகவும் விருப்பம்’ எனும் நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்படும்படியாகச் சொல்ல வேண்டும்.

குழந்தைகளின் ஆசைகள் எவ்வளவு ஆழமாக உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோர்களின் அழுத்தமும், எதிர்பார்ப்பும் இல்லாமல், பெற்றோர்கள் தம் பாத்திரத்தைத் தாண்டாமல் இருந்தாலே குழந்தைகள் வெற்றிப் படிக்கட்டில் மடமடவென ஏறி போகும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். குழந்தைகள் கூறும் விஷயங்களை நம்பி அன்புடன் ஆதரவாக நடந்து கொள்ளும் பெற்றோர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு என்றும் குறை இருக்காது.

- ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com