
குளிர்காலம் வந்துவிட்டால் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒன்றுக்கு இரண்டு போர்வைகளைப் பயன்படுத்தி நம்மை கதகதப்பாக வைத்துக் கொள்கிறோம். இது தவிர அவ்வப்போது சூடான காபியைக் குடித்து இதமாக்கிக் கொள்கிறோம். ஆனால், நம் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளை நாம் கண்டு கொள்வதில்லை. அவை குளிரால் நடுங்குகின்றன. இந்தப் பதிவில் குளிர்காலத்தில் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கான சில முக்கிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு சூடான, ஈரம் இல்லாத இடம் அவசியம். அவை இருக்கும் இடத்தை சூடாக இருக்கும்படி தேர்வு செய்யவும். அதிக வெப்பமாக இருந்தாலும் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படலாம். எனவே, காற்றோட்டத்திற்கான வழி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், அவை தேவைப்பட்டால் சுதந்திரமாக வெளியே வந்து சுற்றித் திரிய முடியும்.
செல்லப்பிராணிகள் குளிர்காலத்தில் குறைவாகவே சாப்பிடுவதால், அவற்றிற்கு அதிக கலோரி தேவைப்படும். எனவே, அவற்றின் உணவில் கொஞ்சம் மாற்றம் செய்து கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைக் கொடுக்கவும்.
அவை குடிப்பதற்கு குளிர்ச்சியான தண்ணீர் கொடுப்பதற்கு பதிலாக, தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கிக் கொடுக்க வேண்டும்.
முடிந்தவரை குளிர்காலத்தில் செல்லப்பிராணிகளை அடிக்கடி குளிப்பாட்டுவதைத் தவிர்க்கவும். அவ்வாறு செய்தால் அவற்றின் உடல் வெப்பம் வெகுவாகக் குறைந்து உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
குளிர்காலத்தில் அவற்றை வெளியே அழைத்துச் செல்கிறீர்கள் என்றால், அவற்றுக்கென சிறப்பு உடைகளை அணிவிக்கவும். அல்லது குளிர்காலத்தில் அவற்றை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்.
செல்லப்பிராணிகளில் சருமம் குளிர்காலத்தில் எளிதில் வறண்டு போகும். எனவே, அவற்றின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க சிறப்பு க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது. இத்துடன் அவ்வப்போது கால்நடை மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதனால், ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.
குளிர்ச்சியான காலநிலையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது போலவே செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது நம் கடமை. அவற்றுக்குத் தேவையான விஷயங்களில் கவனம் கொடுப்பதன் மூலம் நம் செல்லப்பிராணிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். மேலே, குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நமது செல்லப் பிராணிகள் குளிர்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க உதவ முடியும்.