ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆனாலும், சில காய்கறிகளுடன் சில உணவுகளை சேர்த்துச் சாப்பிடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வெண்டைக்காயில் வைட்டமின் கே, சி, ஃபோலேட், மெக்னீசியம், வைட்டமின் பி, மாங்கனிஸ் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், இதை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். அந்த வகையில் வெண்டைக்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பால்: வெண்டைக்காய் ,பால் இரண்டிலும் கால்சியம் சத்துக்கள் இருந்தாலும், வெண்டைக்காயில் கால்சியத்துடன் ஆக்சலேட்டும் உள்ளதால், இவை இரண்டும் சேர்ந்து கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்கி சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் என்பதால் வெண்டைக்காய் சாப்பிட்டதும் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. பாகற்காய்: பாகற்காய் மற்றும் வெண்டைக்காய் இரண்டுமே ஜீரணிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள். மேலும், பாகற்காயின் தன்மை சூடாகவும், வெண்டக்காயின் தன்மை குளிர்ச்சியாகவும் இருப்பதால் இவை ph சமநிலையை சீர்குலைத்து மலச்சிக்கல், அஜீரணம், வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இரு காய்களையும் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. தேநீர்: தேநீர் ஒரு டானின் நிறைந்த உணவாக இருப்பதால் வெண்டைக்காயை சாப்பிட்டதும் தேநீர் குடித்தால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும் என்பதால் வெண்டைக்காய் சாப்பிட்டதும் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. முள்ளங்கி: முள்ளங்கியில் சல்பர் கலவைகள் இருப்பதால் இது வாயு பிரச்னையை அதிகரிக்கும். தவறுதலாகக் கூட முள்ளங்கி சாப்பிட்ட பிறகு வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது. ஏனெனில், வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தி வாயு பிரச்னையை அதிகரிக்கும் என்பதால் முள்ளங்கியுடன் வெண்டைக்காய் சாப்பிடுவதை அறவே தவிர்த்து விட வேண்டும்.
5. சிவப்பு இறைச்சி: வெண்டைக்காய் மற்றும் இறைச்சி இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் சிவப்பு இறைச்சியுடன் வெண்டைக்காய் சாப்பிட்டால் செரிமானத்தை பாதித்து, உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இரண்டையும் சாப்பிடக் கூடாது.
மேற்கூறிய ஐந்து உணவுகளுடன் வெண்டைக்காயை சாப்பிடாமல் தவிர்ப்பது உடல் நலப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.