அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல; நம் உடல், மனம் சார்ந்ததும் ஆகும். வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டும் தொடர்புடைய பிரச்னை அல்ல. வயிற்றில் பிரச்னை இருந்தாலும் ஏற்படும். வாய் துர்நாற்றத்துக்கான காரணமும் அவற்றுக்கான தீர்வையும் இந்தப் பதிவில் காண்போம்.
1. பல் சொத்தை, ஈறுகளில் பிரச்னை இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதற்கு பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
2. பல்லை சரியாகத் தேய்த்து பராமரிக்கத் தவறினால் பல்லின் மேல் காரை ஏற்பட்டு துர்நாற்றம் வீசும். இதற்கு நாம் தினமும் இரண்டு வேளையும் பல் தேய்ப்பதுடன் வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது சிறந்த பலனைத் தரும்.
3. சில சமயம் சில நோய்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் காரணமாக கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு சிறந்த மவுத் வாஷை உபயோகிக்கலாம்.
4. நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கியக் காரணம் நம் வாய் அடிக்கடி வறண்டு போவதால் பாக்டீரியாக்களை உருவாக்கி இப்பிரச்னை ஏற்பட வழி வகுக்கிறது. இதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த வழி. இதனால் வாய் வறண்டு போகாமல் தடுக்கப்படுவதுடன் துர்நாற்றமும் வீசாது.
5. ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் வாயை நன்கு கொப்பளிப்பது நல்லது.
6. பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதை குறைத்துக் கொள்ளலாம். அதேபோல், அடிக்கடி காபி, டீ அருந்துவதும் பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகிறது. எனவே, அவற்றை அளவாக பயன்படுத்துவது நல்லது.
7. சாப்பிட்டதும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லக் கடித்து வாயில் ஒதுக்கிக் கொண்டு அதன் நீரை மெள்ள உள்ளே இறக்கலாம்.
8. அதேபோல், ஒரு கிராம்பை எடுத்து சிறிது கடித்து வாயில் அடக்கிக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
9. உணவுக்குப் பின் ஒரு துண்டு கேரட் அல்லது ஆப்பிள் துண்டை எடுத்து வாயில் போட்டு மெல்ல நல்ல பலன் கிடைக்கும்.
10. எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும். இதற்கு சர்க்கரை கலக்காத ஏதேனும் ஒரு பழ ஜூஸ் பருகலாம் அல்லது ஆரஞ்சு சுளையை வாயில் போட்டு மெல்லலாம்.
11. தினமும் காலையில் பல் தேய்த்ததும் Tongue cleaner உபயோகித்து நாக்கை சுத்தம் செய்யலாம்.
12. உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பை சிறிது வாயில் போட்டு மெல்லலாம்.
13. சில நோயின் அறிகுறியாக கூட வாய் துர்நாற்றம் வரலாம். இதற்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
14. அஜீரணக் கோளாறு இருந்தாலும் வாய் துர்நாற்றம் அடிக்கும். இதற்கு தயிரை கடைந்து மோராக்கி பருக நல்ல பலன் கிடைக்கும்.