சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை. தினமும் ஒரு பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி சமையலறையை சுத்தம் செய்ய பளீச்சென்று இருக்கும். இதற்காக நாம் அதிக நேரத்தையோ பணத்தையோ செலவிட வேண்டியதில்லை. சமையல் மேடைக்கு பின்புறம், பக்கவாட்டுகளில் உள்ள டைல்ஸ்கள் எளிதாக அழுக்கும், எண்ணெய் பிசுக்கும் பிடித்துக்கொள்ளும். இதற்கு அரை கப் வினிகருடன் கால் கப் பேக்கிங் சோடா,கால் கப் லிக்விட் சோப் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக்கொண்டு எண்ணெய் கறை, கிரீஸ் படிந்த டைல்ஸ்களின் மீது தெளித்து பிரஷ்ஷால் சுத்தம் செய்யவும். இதனால்எண்ணெய் பிசுக்குகள் காணாமல் போய் பளிச்சிடும்.
காய்கறிகள் வெட்டுவதற்கு பயன்படும் மரப்பலகைகள் கறைகளுடன் சில சமயம் துர்நாற்றமும் வீசும். இதற்கு கறை உள்ள இடங்களில் உப்பைத் தெளித்து அரை மூடி எலுமிச்சம் பழச்சாறையும் சேர்த்து நன்கு தேய்த்து கழுவ காய் நறுக்கும் பலகைகள் பளிச்சிடும்.
சமையலறையில் கைப்பிடி துணிகள் இரண்டு வைத்துக் கொண்டு ஒன்று மேடை சுத்தம் செய்யவும், மற்றொன்று நம் கைகளை அவ்வப்போது துடைத்துக் கொள்ளவும் வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது அவற்றை சோப்பு கலந்த நீரில் அலசி போட சுத்தத்துடன் சமையல் மேடையும் பளிச்சென்று இருக்கும்.
அடுப்பில் பால், சாம்பார், ரசம் ஆகியவை பொங்கி விடாமல் அருகில் நின்று அணைத்து விட பர்னர்கள் அடைத்துக் கொள்ளாது. சிறிது கவனக்குறைவால் பொங்கி விட்டால் உடனடியாக ஈரத்துணி கொண்டு துடைத்து விடவும்.
பாத்திரங்களில் உப்புக் கறை படிந்திருந்தால் அவற்றை எளிதாகப் போக்க ஒரு வழி உண்டு. அரிசி களைந்த நீரை பாத்திரம் மூழ்கும் வரை ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைத்து பிறகு தேய்த்துக் கழுவ உப்புக்கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சில சமயம் நாம் அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு மறந்து விடுவோம். பாத்திரம் அடி பிடித்து விடும். இதனைப் போக்க அடிபிடித்த பாத்திரத்தில் ஒரு கப் நீர் விட்டு கால் கப் வினிகர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து சிறிது நேரம் கழித்து கடினமான பிரஷ் கொண்டு தேய்க்க சரியாகி விடும்.
வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கியதும் கத்தி பலகை ஆகியவற்றை சுத்தம் செய்வதும், அந்த இடத்தை தண்ணீர் கொண்டு துடைப்பதும் கரப்பான் பூச்சி, எறும்புகள், பல்லி ஆகியவற்றின் நடமாட்டத்தை தடுக்கும்.
இரவு படுக்கப்போகும் சமயம் தண்ணீரில் சிறிதளவு டெட்டால் விட்டு ஒரு துணியை நனைத்து கிச்சன் மேடையை துடைத்து விட, சிறு பூச்சிகளின் தொல்லை இராது. மேடையும் சுத்தமாக இருக்கும்.
சிங்கில் அழுக்கு, பிசுக்கு, பிசுபிசுப்பு, எண்ணெய்க் கறை இல்லாமல் இருக்க லிக்விட் சோப் போட்டு தேய்த்து விட்டு நன்கு சுடவைத்த வெந்நீரை ஊற்றி விட பிசுபிசுப்பு போவதுடன் அடைப்பும் இல்லாமல் இருக்கும்.
சமையலறையில் சிங்கிற்கு கீழ் மூடும் வசதி கொண்ட சமையலறை குப்பைக் கூடையை வைத்து அருகிலேயே ஒரு சிறு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை சிறிதளவு போட்டு வைத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும். துர்நாற்றம் வீசாது.
பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ஸ்டீல் நார், ஸ்பான்ச் போன்றவை எப்போதும் ஈரமாக இல்லாமல் வேலை முடிந்ததும் வெயிலில் சிறிது நேரம் போட்டு வைக்கலாம். இல்லையெனில் இவற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கலாம்.
சமையல் மேடையில் எண்ணெய் அதிகம் சிந்திவிட்டால் முதலில் ஒரு பேப்பர் கொண்டு துடைத்து விட்டு கடலைமாவு ஒரு ஸ்பூன் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து தேய்க்க எண்ணெய்ப் பசை போய்விடும்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வராமல் இருக்க எலுமிச்சம் பழம் பிழிந்த ஓடுகளை இரண்டு போட்டு வைக்கலாம். அத்துடன் சமைத்த எந்த உணவு பொருளையும் ஃபிரிட்ஜில் திறந்து வைக்காமல் இருப்பது நல்லது.
நறுக்கிய மிச்சம் பாதி வெங்காயம், தோலுரித்த பூண்டு, மல்லிப்பூ ஆகியவை கவரில் மூடி வைக்காமல் திறந்திருப்பது போன்றவை அதன் மணத்தை மற்ற பொருட்கள் மீது பரப்பி விடும்.
சமையலறையில் இவற்றையெல்லாம் பின்பற்றினால் ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழலாம்.