

பெற்றோர்களே, உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், அவர்களை சமாளிப்பது ஒரு பெரிய சவால்தான். நடக்கப் பழகும்போது, பல நேரங்களில் குழந்தைகள் விழுந்து விடுவது இயல்பு. அதனால், அவ்வாறு விழாமல் இருக்க நாம் வீட்டில் கவனிக்க வேண்டியும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த சில பயனுள்ள விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்!
தரையில் காலில் தட்டிவிடக்கூடிய தரை விரிப்புகள், கால் மிதிகள் போன்றவை குழந்தைகள் நடக்கும் வழியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருந்தால், அவை மடிப்புகள் இல்லாமல் இருக்குமாறு கவனிக்கவும்.
குழந்தைகள் நடக்கும்போது, சிறுநீர் கழித்திருந்தால் உடனே அந்த இடத்தை சுத்தம் செய்து, தரை ஈரமில்லாமல் வைத்திருக்கவும்.
குழந்தைகள் உறங்கும்போது எக்காரணம் கொண்டும் அவர்களை தனியாக விட்டுச் செல்லாதீர்கள். திடீரென எழுந்து, கட்டிலிலிருந்து அவர்கள் இறங்கி வர முயற்சிக்கக்கூடும்.
குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் எங்கும் சிதறாமல் இருக்குமாறு கவனிக்கவும். இவை கால் தடுக்கி விழும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.
நடக்கும்போது, சாவி அல்லது கூர்மையான பொருட்கள் குழந்தைகளின் கைகளில் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நடக்க ஆரம்பித்த பிறகு, குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் எடுத்து வீச முயற்சிக்கக்கூடும். எனவே, அவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் பொருட்களை வைக்கவும்.
இப்போது ஆன்லைனில் பல வகையான Child Lockerகள் கிடைக்கின்றன. அவற்றை தேவையான இடங்களில் பொருத்தி விடுங்கள்.
அவர்களின் உயரத்தில் உள்ள டேபிள் மற்றும் ஷோக்கேஸ் கார்னர்களில், அதற்குரிய ரப்பர் பீட்டிங் பொருத்தி விடவும். இதனால் முனைகளில் குழந்தைகள் இடித்துக் கொள்ளாமல் இருக்க முடியும்.
தரையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இந்தக் காலக்கட்டத்தில், சிறு பொருள் எது கையில் கிடைத்தாலும், அதை அவர்கள் வாயில் போடக்கூடும்.
சமையலறையில் மேடை மற்றும் சாப்பாட்டு மேசையில் உள்ள பாத்திரங்கள், குழந்தைகள் எட்ட முடியாத வகையில் வைக்க வேண்டும். சூடானவற்றை இழுத்து தங்கள் மீது கொட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
மாடிப்படிகள் மற்றும் சமையலறைக்கு, குழந்தைகள் செல்ல முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள். கதவுகள் அல்லது தடுப்புகள் அமைப்பது சிறப்பு.
குழந்தைகள் இருக்கும் அறையில், குளியலறை கதவுகள் மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால், அவற்றிடம் குழந்தைகள் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் ஒவ்வாமை ஏற்படலாம்.
குழந்தைகள் வெளிப்புறக் கதவுகளுக்கு அருகில் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.