
உங்கள் ஆடையில் நெயில் பாலிஷ் கொட்டிவிட்டால் பதற்றப்பட வேண்டாம். வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு சுலபமாக அதை எப்படி நீக்குவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நெயில் பாலிஷ் ஆடையில் பட்டவுடன் ஆடையின் டெக்சருக்கு தகுந்தாற்போல் எந்த முறையை பின்பற்றி அதை நீக்குவது என்பதை தீர்மானித்து உடனடியாக செயலில் இறங்குவது முக்கியம்.
மென்மையான துணி மீது கறைபட்டிருந்தால், அதன் மீது நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது ஆல்கஹால் அல்லது டிஷ் வாஷ் சோப்பை கவனமுடன் தேய்த்து கறையை நீக்கலாம்.
ஆடையில் பட்ட நெயில் பாலிஷ் உலராமலிருந்தால், ஒரு பேப்பர் டவலின் உதவியால் அதிகப்படியான பாலிஷை ஒற்றி எடுக்கலாம். அழுத்தி தேய்ப்பதை தவிர்த்தால் பாலிஷ் மேலும் பரவாமல் தடுக்கலாம்.
கறை உலர்ந்து போயிருந்தால் கூர்மையற்ற கத்தி அல்லது ஒரு ஸ்பூனின் உதவியால் மேலாக சுரண்டி எடுக்கலாம். பின் மீதமுள்ள கறையை நீக்க, துணியின் டெக்சருடன் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழிமுறைகளைப் படித்துவிட்டு, நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிப்பதில் தவறேதுமில்லை என தெரிந்த பின் ஒரு சுத்தமான துணியில் நெயில் பாலிஷ் ரிமூவரை நனைத்து கறை மீது லேசாக தடவி கறையை நீக்கலாம்.
இதற்கு மாற்றாக ஆல்கஹால் அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைடையும் உபயோகிக்கலாம். இந்த முயற்சியின்போது கறைபட்ட இடத்தை தூக்கிப்பிடித்து அதன் அடியில் ஒரு பேப்பர் டவல் வைத்துக்கொண்டால் கரைந்து வரும் பாலிஷ் துணியின் அடுத்த லேயரில் பரவுவதைத் தடுக்க முடியும். ஓரளவுக்கு கறை முற்றிலும் நீங்கிய பின் சில துளி டிஷ் சோப்பை அந்த இடத்தில் விரல்களால் தடவி, பிறகு குளிர்ந்த நீரால் அந்த இடத்தை கழுவி விடலாம்.
பின் நல்ல சூடான தண்ணீரில் ஆடையை முழுவதும் முக்கி எடுத்து காயவைத்தால் கறை நீங்கி உங்கள் உடை புதிது போலாகிவிடும். விடாப்பிடி கறையாக இருந்தால் மீண்டும் ஒருமுறை பொறுமையுடனும் கவனமுடனும் இதே வழிமுறையைப் பின் பற்றினால் வெற்றி நிச்சயம்.