
திருமணம் என்பது பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்தது. திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் எதற்காக, ஏன் செய்யப்படுகின்றன என்று நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நம் முன்னோர்கள் ஒவ்வொரு சடங்குகளையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன் தான் நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை பந்தம்.
இந்தியாவில் பல்வேறுபட்ட இனத்தினர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இந்துக்கள் வெவ்வேறு விதத்தில் திருமணச் சடங்கை செய்கின்றனர்.
நம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திருமணத்தில் பல சடங்குகள் இருந்தாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்து மத சாஸ்த்திரப்படி திருமணத்தில் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.
'மாங்கல்யம் தந்துநாநே' - என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த மந்திரத்தின் பொருள்: ''இது மங்கலசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிக்கிறேன். சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!'
இப்படி சொல்லி போடப்படும் 'மூன்று முடிச்சுகள்’ அர்த்த புஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் சகோதரி மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள். ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.
மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம்.
தாலி கட்டும்போது போடப்படுகிற மூன்று முடிச்சுயானது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை குறிக்கிறது. ஒரு பெண் இந்த மூன்று நிலைகளிலும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். அப்பெண் எண்ணம், சொல், செயலில் தூய்மையாக இருக்க வேண்டும். கடவுள் பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மரியாதை, கணவன் மீது அன்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மூன்று முடிச்சு அர்த்தம்:
முதல் முடிச்சு:
தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாக இருக்கவும் சிறந்த அறிவாளியாக திகழவும், படைத்த பிரம்மாவையும், ஞானத்தை கொடுக்கும் சரஸ்வதி தேவியையும் வணங்கி முதல் முடிச்சு போடப்படுகிறது.
இரண்டாவது முடிச்சு:
குழந்தை ஆரோக்கியமாக, அறிவாளியாக பிறந்தாலும், அந்த குழந்தை பிறருக்கு உதவி செய்யவும், நல்ல குணங்களோடு இருக்கவும், செல்வச் செழிப்புடன் வாழவும், காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி தேவியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது.
மூன்றாவது முடிச்சு:
மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக, அறிவாளியாக, நல்ல குணங்களோடு செல்வச் சீமானாக வாழ்ந்தாலும், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும், அக்கிரமங்கள் தலை தூக்கும் முன்பே, அவற்றை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும் துணிச்சல் வேண்டும் என்பதற்காக சிவபெருமானையும், வீரத்திற்கு அடையாளமாக திகழும் பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும், திரிசுரணசுத்தியாக மனம், வாக்கு, உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் மற்றும் முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன.