நாம் தினமும் பயன்படுத்தும் நெத்திப் பொட்டை (sticker bindi) வைத்துக் கூட நம் வீட்டிற்கு தேவையான சில சிம்பிள் ஹேக்களை (Hacks) செய்துக் கொள்ளலாம். நெத்திப்பொட்டை வைத்து என்ன செய்ய முடியும்? என்று நினைப்பவர்கள் இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள்.
1. நாம் பயன்படுத்தும் தோடுகளுக்கு பட்டன் அடிக்கடி காணாமல் போய்விடும். அப்படியாகும் போது அதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவோம். அதற்கு இந்த நெத்திப்பொட்டை வைத்து ஒரு சிம்பிள் தீர்வு இருக்கிறது. முதலில் தோடுக்கு பின்புறமாக பொட்டை அழுத்தி குத்தி வைத்துக் கொண்டு அதன் பின்பு பட்டனை போடும் போது தோடு பட்டனும், பொட்டும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். இதனால் பட்டன் அவ்வளவு சீக்கிரம் தொலைந்து போகாது.
2. போனுக்கு பயன்படுத்தும் சார்ஜரை எந்த பக்கம் மாட்டுவது என்ற குழப்பம் அடிக்கடி நமக்கு ஏற்படும். அதை போக்குவதற்கு சார்ஜ் போடும் பக்கத்தில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வைத்தால் இந்த குழப்பதிற்கு எளிய தீர்வாக அமையும்.
3. நூல்கண்டுகளில் இருக்கும் நூல் அவ்வபோது பிரிந்து வந்து சிக்கிக்கொண்டு வீணாகும். அதற்கு எளிய தீர்வாக நூலை நன்றாக சுற்றி அதன் நுனியில் ஸ்டிக்கர் பொட்டை சேர்த்து ஒட்டிவிட்டால் நூல் வீணாவதை தடுக்கலாம்.
4. நாம் தினமும் வீட்டில் பயன்டுத்தும் ஸ்விட்ச்சாகவே இருந்தாலும், எந்த ஸ்விட்ச் லைட்டிற்கு, எது ஃபேனிற்கு என்ற குழப்பம் ஏற்படும். இதை சரிசெய்ய லைட் ஸ்விட்ச்சிற்கு ஒரு நிறத்தில் பொட்டு, ஃபேன் ஸ்விட்ச்சிற்கு ஒரு நிறத்தில் பொட்டு என்று ஒட்டி வைத்துவிட்டால், நமக்கு பயன்படுத்த சுலபமாக இருக்கும்.
5. தலைக்கு போடும் கிளிப்கள் பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே இருக்கும். அதில் பெரிதாக எந்த டிசைனும் இருக்காது. அதை அழகுப்படுத்த ஸ்டோன் ஸ்டிக்கர் பொட்டுகளை அதன் மீது எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஒட்டி மேலும் அந்த கிளிப்பை அழகுப்படுத்தலாம்.
6. சாதாரண பொட்டை வைப்பதை சற்று மாற்றி பொட்டை நிலா வடிவத்தில் வெட்டிவிட்டு அதை வைத்து குங்குமம், சந்தனம் சேர்த்து வைக்கும் போது மேலும் அழகாக இருக்கும்.
7. பொட்டு இருக்கும் அட்டையை இரண்டு பக்கமும் ஸ்டாப்ளர் அடித்துவிட்டு அதை ஒரு குட்டி பர்ஸ் போல பயன்படுத்தலாம். அந்த அட்டைக்குள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை போட்டு வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் சில்லறைகளை போட்டு மூடி வைத்துக் கொள்ள முடியும். தொலைந்துப் போகாமல் பத்திரமாக இருக்கும்.
8. பெண்கள் பிளவுஸ் போடும் போது அதில் குத்தும் ஊக்கில் துணி அடிக்கடி மாட்டிக்கொண்டு கிழிந்துவிடும். இதை சரிசெய்ய ஊக்கினுள் முதலில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை குத்தி வைத்துவிட்டு பிறகு பிளவுஸில் போடும் போது துணி ஊக்கில் சிக்காமல் இருக்கும்.
9. நாம் பயன்படுத்தும் செல்போனின் கவரில் பொட்டுகள் சிலவற்றை ஒட்டி வைத்துக்கொள்ளும் போது வெளியிலே செல்லும் போது சிலசமயம் நாம் வைத்திருக்கும் பொட்டு கீழே விழுந்துவிடும். அப்போது இதிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.