

அலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக சில சமயம் எரிச்சல் ஏற்படலாம். வேலையில் எரிச்சல் என்பது சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் வேலையில் ஆர்வமின்மை போன்ற பல வடிவங்களில் வெளிப்படலாம். இதுபோன்ற எரிச்சல்களை சமாளிக்க சில வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. எல்லைகளை அமைக்கவும்: வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வேலை தொடர்புகளை தவிர்ப்பதன் மூலம் ஒரு சமநிலையான வாழ்க்கை முறையை உருவாக்க முடியும். விடுமுறை நாட்களிலும் வேலைகளை இழுத்து போட்டு செய்வது, அதைப் பற்றிய டென்ஷன் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வெளியில் செல்வது, அரட்டை அடிப்பது, ஒரு நல்ல சினிமா பார்ப்பது, நல்ல உணவை எடுத்துக்கொள்வது என உற்சாகமாக நேரத்தை செலவிடலாம். இது அலுவலக நாட்களில் நம்மை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வேலை செய்யத் தூண்டும்.
2. திறம்பட தொடர்பு கொள்ளுதல்: மனிதர்கள் சமூக விலங்குகள். நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது சிறப்பாக செயல்படுகிறோம். எனவே, சக ஊழியர்களிடம் நம் பணிச்சுமை அல்லது சவால்கள் குறித்து மனம் திறந்து தெளிவாகப் பேசலாம். இது பிரச்னைகளை தீர்க்க உதவும். பிரச்னைக்குரிய சூழ்நிலைகளை சக ஊழியர்களுடன் கலந்து பேசி பிரச்னையை சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்வதும் எரிச்சலைப் போக்க உதவும்.
3. கட்டுப்பாட்டை உணர்வது: நம் வேலையில் நாம் ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாக உணர்வது மிகவும் முக்கியம். இது மன அழுத்தத்தை குறைக்கவும், உந்துதலை அதிகரிக்கவும் உதவும். செய்ய வேண்டிய பணிகள், அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களின் பட்டியலை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு நாளையும் தொடங்கலாம். செய்ய வேண்டிய பணிகள், செய்ய விரும்பும் பணிகள் மற்றும் காத்திருக்கக் கூடியவற்றின் அடிப்படையில் அந்தப் பட்டியலை முன்னுரிமைப்படுத்தலாம். ஒரு பெரிய வேலையை சிறிய பணிகளாக பிரிப்பதன் மூலம் அவற்றை எளிமைப்படுத்துவதால் எரிச்சல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
4. வேலையில் கவனம் செலுத்துதல்: கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை தவிர்த்து விட்டு, ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது எரிச்சலைப் போக்குவதுடன், உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவும். அதற்கு போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரலாம். அத்துடன் ஒவ்வொரு வேலைக்கும் இடையே சிறிய இடைவேளைகள் எடுப்பது கவனத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவும்.
5. மன அழுத்தத்தை குறைக்கும் தளர்வு நுட்பங்கள்: தியானம், யோகா, ஆழமான சுவாசம் அல்லது வேறு சில மன அழுத்தத்தை குறைக்கும் நுட்பங்களை நடைமுறைப்படுத்த வேலை எரிச்சல்களை சமாளிப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது, வாய்விட்டு சிரிப்பது மன அழுத்தத்தைப் போக்க உதவும். வேலை நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுவது வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்த உதவும்.
6. ஆர்வம் இழப்பதை தவிர்ப்பது: ஒரே மாதிரியான வேலைகளைத் தொடர்ந்து செய்வதால் சலிப்பு ஏற்படும். எனவே, புதிய சவால்களைத் தேடுவது வேலையில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும். சலிப்பை உண்டாக்கும் பணிகளைத் தவிர்ப்பதன் மூலம் வேலையில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆர்வமுடன் செய்யும் எந்த வேலையும் எரிச்சலை ஏற்படுத்தாது. செய்யும் வேலையை ஆர்வமுடன் செய்வது நம் நம்பிக்கையும் திறனையும் வெளிப்படுத்தும்.