

நாம் தினசரி உபயோகப்படுத்தும் பொருட்களை சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோம். தேவைப்படும்போது எடுத்தால் அது நிறைய வேலை வைக்கும். அவற்றை பராமரித்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்!
* மழைக்காலத்தில் குடையை அதிகமாகப் பயன்படுத்திவிட்டு பிறகு அதை அப்படியே வைத்து விடுவோம். திரும்பப் பயன்படுத்த எடுக்கும்பொழுது அதில் நிறைய ஓட்டைகள் விழுந்திருக்கும். அதைத் தடுப்பதற்கு நாப்தலீன் உருண்டைகளை அதில் போட்டு வைக்கலாம்.
* வெள்ளி சாமான்களுக்குப் போடப்படும் பாலிஷ் தீர்ந்து விட்டால் பற்பசையை நன்கு தடவி பின் தேய்த்தால் பாலிஷ் போட்டது போலவே இருக்கும்.
* வியர்வை துணிகளை உடனுக்குடன் துவைத்து விட்டால் மஞ்சள் நிறக் கறை ஏற்படாது அல்லது வியர்வை துணியை உடனே குளிர்ந்த நீரில் நனைத்தாலும் மஞ்சள் கறை ஏற்படாமல் தடுக்கலாம்.
* பாட்டில் மூடி திறப்பதற்கு கடினமாக இருந்தால் கழுத்துப் பகுதிகளில் சிறிது எண்ணெய், உப்பு கலந்து தேய்த்தால் எளிதாகத் திறந்து விடும்.
* பிளாஸ்கில் எதையும் சூடாகவோ குளிர்ச்சியாகவோ ஊற்றும் முன்பு சிறிது தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு ஊற்றினால் பிளாஸ்க் நீண்ட நாள் உழைக்கும்.
* மிக்ஸி பிளேடுகள் மழுங்கி விட்டால் கல்லுப்பை ஒரு கையளவு போட்டு ஓரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டினால் பிளேடுகள் கூர்மையாகிவிடும்.
* குக்கரில் உள்ள சேப்டி வால்வை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழுக்கு அடைத்தால் வெடிக்கும் அபாயம் உண்டு.
* சிறிது நீரை நன்றாகக் கொதிக்க வைத்து சமையலறை சிங்க்கில் கொட்டி விட்டால் பைப்புகளில் இருக்கும் அனைத்து பூச்சிகளும் இறந்துவிடும். ஆனால் கீழே இருக்கும் பிளாஸ்டிக் பைப்புகள் உருகி விடும் வாய்ப்பு உண்டு. அதற்கு பதிலாக சிங்க் துவாரத்தில் டீ ஃபில்ட்டரை வைத்து விட்டால் அதில் தூசுகள் சேர்ந்து விடும். அதை அகற்றுவது எளிதாக இருக்கும். அதன் பின் பைப்பில் அடைப்பு ஏற்படாது.
* எவர்சில்வர் பாத்திரம் வாங்கும்பொழுது ஒரு காந்தத் துண்டை அதன்மேல் ஒட்டிப் பார்க்கவும். ஒட்டிக் கொண்டால் அதில் இரும்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
* ஸ்டீல் பிளேடுகள் பொருத்திய மின்விசிறிகளைத் தவிர்த்து அலுமினியம் மற்றும் பைபர் கிளாசினால் ஆன பிளேடுகள் பொருத்தியவை துருப்பிடிக்காமல் இருப்பதுடன் பராமரிப்பும் சுலபமாகும்.
* வாட்டர் ஹீட்டரின் உள்பகுதியும் வெளிப்பாத்திரமும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்டதாக இருக்குமாறு பார்த்து வாங்கினால் பராமரிப்பு செலவு ஓரளவு மிச்சமாகும்.
* துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி இவற்றின் மீது உபயோகித்த எண்ணெய்யை தேய்த்தால் துரு போய் பளிச்சென்று ஆகிவிடும்.
* பாத்ரூம் டைல்ஸ்சில் கறை படிந்து இருந்தால் பேக்கிங் சோடாவை சுத்தமான தண்ணீரில் கரைத்து, கறை மீது துடைத்தால் போய்விடும்.
* சில கறைகள் எது போட்டாலும் போகாமல் இருக்கும். பேக்கிங் சோடா பவுடரை வினிகரில் கரைத்து கறை பிடித்த இடங்களில் தேய்த்து வைத்தால் சிறிது நேரத்தில் கறை கரைந்து விடும்.