

குழந்தைகளின் சுய மதிப்பை உயர்த்தும் வழிகளில் முக்கியமானது சிறு வயதிலிருந்தே அவர்கள் தன்னம்பிக்கையோடு வளர உதவ வேண்டும். தன்னம்பிக்கை என்பது தன் மீது, தனது செயல்களின் மீது உறுதியாகவும், தீர்மானமாகவும் வைத்திருக்கும் நம்பிக்கைதான் தன்னம்பிக்கை. தன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற எண்ணமும், பிறரது உதவி இல்லாமல் தானே செய்து முடிக்கும் உறுதியான எண்ணமும் ஏற்பட வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்ப்பது: பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களைத் தூண்டுவதும், தைரியமான வார்த்தைகள் பேசுவதும், பய உணர்வு இன்றி சொல்ல வந்த விஷயங்களை முழுமையாக சொல்லவும் நாம் அனுமதிக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் கட்டாயப்படுத்தி செய்யச் சொல்லக் கூடாது. ஆரம்பித்த செயலை முழுமையாக செய்யவும், எடுத்த காரியத்தை பாதியில் விட்டுவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தலாம். தோல்விகளையும் சந்திக்கப் பழக்கலாம். அதேசமயம் மீண்டும் முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்.
கருத்துக்கு மதிப்பளிப்பது: குழந்தைகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், ஆரோக்கியமான உறவை மேம்படுத்தவும் உதவும். பரஸ்பர புரிதலை உருவாக்கும். அவர்களின் முயற்சியை குறைவாக நினைக்கக் கூடாது. விடாமுயற்சி தோல்வியை அசாதாரண சாதனையாக மாற்றும் என்பதை மறக்க வேண்டாம். அவர்களின் நல்ல செயல்களையும், கருத்துக்களையும் பாராட்டுவதன் மூலம் ஊக்கப்படுத்தலாம்.
சுயமாக தீர்மானங்கள் எடுக்க அனுமதிப்பது: அவர்களை சுயமாக சில தீர்மானங்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும், சுதந்திரமாக சிந்திக்கவும் கற்றுக் கொள்வார்கள். செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்று பயமுறுத்தி வளர்ப்பதை விட, தெரியாமல் தவறு செய்தாலும் அதனை நாம் திருத்திக்கொள்ள முடியும் என்பது போல் வளர்க்க வேண்டும்.
உண்மை பேசுவது: பொய் சொல்லக் கூடாது என்பதை விட, நாம் முதலில் உண்மை பேச வேண்டும். நம்மைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ளும். பொய் சொல்லக் கூடாது, உண்மை பேச வேண்டும் என்பது ஒரு முக்கியமான தார்மீகக் கொள்கை. பொய் சொல்வது சிக்கல்களையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். ஆனால், உண்மை பேசுவதோ நேர்மையையும், மன அமைதியையும், சமூகத்தில் மரியாதையையும் தரும். அத்துடன் வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் உன்னதமான பண்பாகும்.
சுயமரியாதையை வளர்ப்பது: குழந்தைகளின் சுயமரியாதையை வளர்க்க உதவலாம். அதற்கென்று தனியாக ரகசிய நுட்பங்களோ அல்லது தனித்துவமான உத்திகளோ தேவையில்லை. குழந்தைகளை நேசிப்பதும், போற்றுவதும் அவர்களின் சுயமரியாதையை வளர்க்க உதவும் எளிமையான மற்றும் மிகவும் அடிப்படையான முறையாகும். சுயமரியாதை குறைவாக உள்ள குழந்தைகள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும், உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சுயமரியாதை அதிகமாக உள்ளவர்களோ உற்சாகமானவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள்.