பள்ளிப் பருவத் தேர்வுகள் முதல் ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வுகள் வரை, வெற்றி பெறுவது வெறும் கனவாக மட்டும் இருந்தால் போதாது; அதற்கான சரியான திட்டமிடலும் அவசியம். பல மாணவர்கள், "நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிக்கிறேன், ஆனால் தேர்வு என்று வந்தால் எதுவும் நினைவில் இருப்பதில்லை," என்று புலம்புவதை நாம் கேட்டிருப்போம்.
மறுபுறம், சிலர் குறைவான நேரமே படித்தாலும் வகுப்பில் முதலிடம் பிடிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களது மூளையின் சக்தி அல்ல, அவர்கள் படிக்கும் முறை. அறிவியல்பூர்வமாக எது வேலை செய்யும், எது வேலை செய்யாது என்பதைப் புரிந்துகொள்வதே வெற்றியின் முதல் படியாகும்.
நேரத்தை வீணடிக்கும் தவறான பழக்கங்கள்!
பெரும்பாலான மாணவர்கள் செய்யும் முதல் தவறு, பாடப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசிப்பதாகும். வரிகளைத் திரும்பத் திரும்பப் படிக்கும்போது, அது நமக்குத் தெரிந்தது போலவே ஒரு போலியான நம்பிக்கையை மூளைக்குக் கொடுக்கும். ஆனால் உண்மையில் அது மனதில் பதிந்திருக்காது. அதேபோல, முக்கிய குறிப்புகளைத் தேடி புத்தகம் முழுவதும் Highlighter கொண்டு வண்ணம் தீட்டுவதும் ஒரு பயனற்ற வேலையே. எல்லாவற்றையும் முக்கியமானதாகக் கருதினால், எையுமே உங்களால் நினைவில் வைக்க முடியாது.
தேர்வுக்கு முதல் நாள் இரவு விடிய விடிய கண் விழித்துப் படிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. போதுமான உறக்கம் இல்லாத சோர்வான மூளையில், அவசர அவசரமாகத் திணிக்கப்படும் தகவல்கள் தேர்வு அறையில் குழப்பத்தையே ஏற்படுத்தும். மேலும், இடைவேளையே இல்லாமல் மணிக்கணக்கில் அமர்ந்து படிப்பதும் சோர்வையே தரும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுக்காவிட்டால் கவனம் சிதறும். யூடியூப் வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு, அதை எழுதிப் பார்க்காமல் விடுவதும் நீச்சலைக் கரையில் இருந்தே கற்பது போன்றது; அது நடைமுறைக்கு உதவாது.
சிறந்த உத்திகள்!
உண்மையில் அதிக மதிப்பெண் பெற விரும்பினால், Active Recall முறையைக் கையாள வேண்டும். அதாவது, ஒரு பக்கத்தைப் படித்தவுடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, "நான் இப்போது என்ன படித்தேன்?" என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். இது மூளையின் நினைவாற்றலைத் தூண்டும் சிறந்த பயிற்சியாகும்.
அடுத்ததாக, ஒரே நாளில் முழுப் பாடத்தையும் படிப்பதை விட, குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்பப் படிப்பது நீண்ட கால நினைவாற்றலுக்கு உதவும். உங்களுக்குப் புரிந்த ஒரு விஷயத்தை, இல்லாத ஒரு நபருக்கோ அல்லது உங்களுக்கோ சத்தமாக பாடம் நடத்துவது போல விளக்கிச் சொல்லுங்கள். சிக்கலான கருத்துகளை எளிமையாக விளக்க முடிந்தால், நீங்கள் அதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.
வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது; முந்தைய ஆண்டு வினாத்தாள்களை எடுத்து, உண்மையான தேர்வுச் சூழலில் அதை எழுதிப் பழகுவது மிக முக்கியம். அப்போதுதான் எங்கே தவறு செய்கிறோம் என்பது தெரியும். தவறு செய்வது இயல்பு, ஆனால் அந்தத் தவறை ஏன் செய்தோம் என்று ஆராய்ந்து அதைத் திருத்திக் கொள்வதில்தான் உண்மையான கற்றல் அடங்கியிருக்கிறது.
தேர்வு, உங்களின் மனப்பாடம் செய்யும் திறனைச் சோதிக்கும் களம் அல்ல; அது உங்கள் புரிதலைச் சோதிக்கும் தளம். கடைசி நிமிட அவசரப் படிப்பு ஒருவேளை கரையேற்றலாம், ஆனால் அது நிரந்தர அறிவைத் தராது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில், சரியான திட்டமிடலுடன், எழுதிப் பார்த்துப் படிக்கும் பழக்கமே உங்களை வெற்றியாளராக மாற்றும். கடினமாக உழைப்பதை விட, கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் உழைப்பதே சிறந்த தேர்ச்சிக்கு வழிவகுக்கும்.