குழந்தைகள் ஸ்மார்ட் கேஜெட்டுகளை அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க சில வழிகள்!

செல்போன் உபயோகிக்கும் குழந்தை
செல்போன் உபயோகிக்கும் குழந்தை
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் ஏன் இதற்கு அடிமை ஆகிறார்கள்? குழந்தைகளுக்கு நிறைய ஓய்வு நேரம் உள்ளது. அவர்களின் ஆற்றலுக்கு சரியான தீனியை நாம் போடாதது ஒரு காரணம். அவர்களுக்கு இருக்கும் எனர்ஜியை நாம் நல்ல வழியில் திசை திருப்பி விடாதது மற்றொரு காரணம். அவர்களின் மூளைக்கு நிறைய வேலை கொடுக்கலாம். கதை புத்தகங்கள் படிப்பது, பொது அறிவை வளர்த்துக்கொள்வது, விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது, உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் கவனத்தை திருப்புவது என்றிருந்தால் ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிக அளவில் குறையும்.

பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆனால், தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதில்லை. சுற்றுப்புறத்துடன் விளையாட விடுவதும் இல்லை. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கின் ஒரே ஆதாரம் யூடியூப், பிளே ஸ்டோரில் வழங்கும் கேம்கள், டிவிக்களில் கார்ட்டூன்கள்தான். தொழில்நுட்பம் நம்மை ஆக்கிரமித்ததால் இந்தக் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் நம் பொன்னான நேரத்தை மிகவும் ஆக்கிரமித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அதிகரித்துள்ளது.

மொபைல் போன்களின் நீண்டகால பயன்பாடு அவர்களது கண்களை மட்டுமல்ல, அவர்களது சமூக வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கும் என்று அவர்களுக்கு புரிய வைப்பது அவசியம். மொபைல் போனுக்கான அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு மற்றொரு வழி அவர்களை மற்ற செயல்களில் ஈடுபடுத்துவதுதான். ஓவியம் வரைவது, பாட்டு படிப்பது, விளையாட்டுக்கள், பயணங்கள், கை வேலைகளில் ஈடுபடுத்துவது போன்றவை. லுடோ, கேரம் போன்ற இன்டோர் விளையாட்டுகளில் ஆர்வத்தை உண்டுபண்ணுவதன் மூலமும், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் படிப்பதன் மூலமும் தொழில்நுட்பத்திற்கு முன்பு இருந்த உலகத்தை நம் பிள்ளைகளுக்குக் காட்டலாம்.

ஸ்மார்ட்போன், டிவி பயன்படுத்துவதற்கான நேர வரம்புகளை நிர்ணயிக்கலாம். தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே அவர்கள் இவற்றை உபயோகிக்க அனுமதிக்கலாம். குழந்தைகள் பெற்றோரிடமிருந்துதான் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். நாம் எப்பொழுதும் போனும் கையுமாக இருந்தால் அவர்களுக்கும் அதில் ஈடுபாடு வரத்தான் செய்யும். எனவே, முதலில் நாம் மொபைல் போன்களின் உபயோகத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தூங்கப்போகும் முன்பு அவசியம் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள்!
செல்போன் உபயோகிக்கும் குழந்தை

புது விஷயங்களில் ஆர்வம் கொண்டு புதிய பொழுதுபோக்கை உண்டாக்கிக் கொண்டால் நம்மை பார்க்கும் குழந்தைகளும் அவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். மொத்தத்தில் நாம் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். நேரம் கிடைக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தோட்டம் அமைக்கக் கற்றுக் கொடுங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும் சின்னச் சின்ன தொட்டிகளில் செடிகளை அமைக்கவும், அவற்றிற்கு தண்ணீர் விடவும், பூக்களை பறிக்கவும் ஊக்கப்படுத்தி இயற்கையின் அழகை அனுபவிக்க கற்றுக் கொடுங்கள்.

வரும் அழைப்புகளை எடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் முன்பு ஃபோனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதிக நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் மீது கவனம் வையுங்கள். அவர்களுக்கு நல்ல புத்தகங்களை படிக்கும் வழக்கத்தை வளர்த்து விடுங்கள். எந்த வகையான அடிமைத்தனத்தையும் குறைத்துக்கொள்ள பிள்ளைகளுக்கு சிறிது அவகாசம் தேவை. அதற்கு நம்மிடம் விடாமுயற்சியும், சிறிது பொறுமையும் தேவை. எதையும் அளவோடு பயன்படுத்த தீங்கில்லை என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com