சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது எழுபதுகளில் மக்களின் பொது வாழ்க்கை எப்படி இருந்தது, தற்போது எப்படி அது மாறி இருக்கிறது என்பதை நினைக்கையில் மிகவும் வியப்பாக உள்ளது. அக்காலங்களில் ஒரு வீட்டில் நான்கைந்து குடித்தனங்கள் இருந்தன. தனி வீடு, சொந்த வீடு என்ற கனவெல்லாம் அக்காலத்தில் யாருக்குமே இருந்ததில்லை. எல்லாமே பெரும்பாலும் ஓட்டு வீடுகள்தான். ‘நாலு கட்டு வீடு’ என்பார்கள். ஒரு ஓட்டு வீட்டில் நான்கு மூலைகளிலும் நான்கு குடித்தனக்காரர்கள் இருப்பார்கள். வாடகை என்பது மாதத்திற்கு நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்தான். குடித்தனக்காரர்கள் எந்த வேற்றுமையும் பாராது உடன்பிறப்புகளாக எண்ணி வாழ்ந்த காலம் அது. இங்கொன்றும் அங்கொன்றுமாக மாடி வீடுகள் காணப்படும்.
பிரிட்ஜ், ஏசி, மிக்சி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், ஸ்டீல் பீரோ, மோட்டார் சைக்கிள், கார் என எதுவுமே இல்லாத குதூகலமான வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் நிலைக்கதவும் எப்போதும் திறந்தே இருக்கும். இரவில் மட்டுமே மூடப்படும். வங்கிகளில் யாருக்கும் சேமிப்பு கணக்கு கூட இருக்காது. எல்லாமே நேரடி பணப்பட்டுவாடாதான்.
மாதச் சம்பளம் என்பது பொதுவாக நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சமாக இருநூறு ரூபாய் வரைதான் இருக்கும். இதை வைத்தே அக்காலப் பெண்மணிகள் ஏழு பேர்கள் கொண்ட குடும்பத்தை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அதிலும் முடிந்தவரை மிச்சம் பிடித்து அவசரத் தேவைகளுக்காகச் சேமித்தும் வைப்பார்கள்.
இப்போது போல அக்காலத்தில் தங்க நகைகளை யாரும் அதிகம் வாங்கியதே இல்லை. யார் வீட்டிலாவது திருமணம் என்றால்தான் தங்க நகைகளை வாங்குவதைப் பற்றி யோசிப்பார்கள். மற்றபடி திருமணத்தின்போது போடும் தங்க நகைகள் மட்டுமே அன்றாட உபயோகத்தில் இருக்கும்.
அக்காலத் திருமணங்கள் பொதுவாக வீடுகளிலேயே நடைபெறும். தற்காலத்தைப் போல பிரம்மாண்டமான திருமண மண்டபங்கள் அக்காலத்தில் இல்லை. ஊரில் இரண்டொரு சிறிய அளவிலான திருமண மண்டபங்கள் காணப்படும். சற்று வசதி படைத்தவர்கள் அங்கு திருமணம் செய்வார்கள்.
ஓட்டல் என்பதெல்லாம் அக்காலத்தில் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு சிறு உணவகங்கள் இருக்கும். அதிலும் அவ்வளவாக கூட்டமெல்லாம் இருக்காது. சிறுவர்கள் சாப்பிட்டு மகிழ வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்து வைப்பார்கள்.
இட்லி, தோசை மாவுகளை ஆட்டுரலில் போட்டு அரைப்பார்கள். சட்னி முதலானவற்றை அம்மியில் அரைப்பார்கள். இதனாலேயே அவை அக்காலத்தில் சுவை மிகுந்த உணவுகளாக இருந்தன.
தனியார் மருத்துவமனைகள் எல்லாம் அக்காலத்தில் கிடையாது. ஏனென்றால், வியாதி என்பது எப்போதாவதுதான் வரும். அப்படியே வந்தாலும் அனைவரும் நாடிச் செல்லுவது அரசு மருத்துவமனைகளுக்குத்தான்.
ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து குழந்தைகள் இருந்தார்கள். ஐந்து வயதானதும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. குடித்தனக்காரர்கள் எல்லா குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகவே எண்ணி பாவித்து பாசமாக இருப்பார்கள். அழுதால் ஓடி வந்து தூக்கி வைத்துக் கொஞ்சுவார்கள்.
அக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள் வீட்டை கவனித்தபடிதான் இருப்பார்கள். எண்பதுகளுக்குப் பின்னரே பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். அவர்களுக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. கூட்டுக் குடும்பம் ஆகையால் குழந்தைகள் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் வளர்ந்தார்கள். பெண்களும் பயமின்றி வேலைக்குச் சென்று வருவார்கள்.
மாலை நேரங்களில் அனைவரும் வீட்டின் முன்னால் உட்கார்ந்து கதைத்து மகிழ்வது அக்காலத்தில் ஒரு வழக்கமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவார்கள். இத்தகைய அனுபவங்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தது. இதனால் நட்பு பலப்பட்டது.
மாதக்கடைசி நாட்களில் சமைக்கும்போது காபித் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, பருப்பு முதலான பொருட்களை அடுத்த வீட்டுக்காரரிடமோ அல்லது சக குடித்தனக்காரரிடமோ சென்று கேட்பார்கள். அனைவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக் கொள்ளுவார்கள்.
சிறுவர்கள் ஒன்றாகக் கூடி விளையாடுவார்கள். எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி கூடி விளையாடி நட்பை வளர்த்துக்கொண்ட பொன்னான காலம் அது.