நடப்பதுதான் மனித இயல்பு. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் நடக்கும் தொலைவில் இருக்கும் கடைக்குக் கூட வாகனங்களில் பயணிக்கும் அளவு உடல் நலத்தில் அக்கறை கொள்வதில்லை. இதனால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்குகின்றன. நடைப்பயிற்சியில் குறிப்பாக எட்டு வடிவ வர்ம நடையை பழகுவது உடலுக்கு சிறந்த ஆற்றலைத் தரும்.
சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் ‘வர்ம மருத்துவத்தில்’ இந்த எட்டு நடைப்பயிற்சி மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுவதற்குக் காரணம் இது நோய்களை குணமாக்கும் வர்மப் புள்ளிகளை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் நடைப்பயிற்சி, குறிப்பாக எட்டு வடிவில் நடப்பது சிறந்த மற்றும் எளிமையான முறையாகும். காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் சமயத்திலோ ஒரு அறையில் அல்லது வெட்ட வெளியில் கிழக்கு மேற்காக கோடு வரைந்து, அதேபோல் பத்தடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வது மிகுந்த பலனைத் தரும். இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்வதுபோல் செய்ய வேண்டும். காலணிகள் இல்லாமல் பாதங்களை கூழாங்கற்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்படி நடப்பது நல்லது.10 நிமிடம் வலச்சுழி நடையும், பத்து நிமிடம் இடச்சுழி நடையும் பயில நோய்கள் நம்மை விட்டு விலகிவிடும்.
இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். செரிமான உறுப்புகளின் திறன் கூடும். உடல் சோர்வை நீக்கி உற்சாகமளிக்கும். பொது மக்களிடையே ‘பெபிள் ஸ்டோன் வாக்கிங்’ எனப்படும் இந்த வர்ம நடை இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்தப் பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். இதனால் சுவாசம் சீர்படுவதுடன், நெஞ்சு சளி கரைந்து தானாகவே வெளியேறிவிடும். இப்பயிற்சியினால் சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் நிறைய அளவில் பிராண வாயு உள்ளே சென்று மார்புச் சளி நீக்கப்படுகிறது.
எட்டு போல் கோடு வரைந்து எட்டு போட்டு நடப்பது என்னும் இப்பயிற்சியை காலை, மாலை என இரண்டு வேளைகள் செய்து வர, இரத்த ஓட்டம் சமன்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நடைப்பயிற்சி இது. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் தீரும். இதனை ஒரு அறையிலோ அல்லது வெட்ட வெளியிலோ, இடம் இருந்தால் மொட்டை மாடியிலோ 8 போடுகிற வடிவத்தில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
இப்பயிற்சியினால் கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலைக் கண்ணாடி அணிவதை இந்த நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம். உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுவதுடன், உடலில் சக்தி பெருகும். அதாவது ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும். கேட்கும் திறனை அதிகப்படுத்தும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரும். ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் குணமாகும். மூட்டு வலி குறையும். சுவாசம் சீராகும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, வலி போன்றவையும் குணமாகும்.
இந்தப் பயிற்சியை சாப்பிட்டவுடன் செய்யக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து செய்யலாம். புதிதாக இந்தப் பயிற்சி செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். சிலருக்கு சிறிய வட்டப்பாதையில் நடக்கும்போது தலை சுற்று ஏற்படலாம். எட்டு வடிவத்தில் அளவை சுருக்காமல் 10 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் வேகமாக நடக்காமல் மிதமான வேகத்தில் நடப்பதே நல்லது.