வீட்டில் விசேஷமா? பதில் பரிசு கொடுக்கணுமா?

Special at home? Do you want to give a gift?
Special at home? Do you want to give a gift?
Published on

ண்டிகையாகட்டும், சிறு பார்ட்டியாகட்டும் அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளாகட்டும், 'ரிட்டன் கிப்ட்' கலாச்சாரம் இன்று மிகப் பரவலாக நடைமுறையில் உள்ளது. பல்வேறு விசேஷங்களுக்கு நான் சென்று வந்தபொழுது அவர்கள் அளித்த சில வித்தியாசமான பதில் பரிசு பொருட்கள் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பகிர்கிறேன். இதைப்போல் நீங்களும் யோசிக்கலாமே!

கிரஹப்பிரவேசம்: பல்வேறு விதமான ஆன்மிகப் புத்தகங்கள் கொடுத்தார்கள். அதில் எனக்குக் கிடைத்தது இந்திய சடங்குகளும் நம்பிக்கைகளும் என்ற புத்தகம்.

உள்வீடு செல்லும்பொழுது: குழந்தை பிறந்து 16வது நாள் தாயையும் சேயையும் வீட்டிற்குள் அழைக்கும்பொழுது, அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் வீட்டு விசேஷம் முடிந்ததும் நம்மை அனுப்பும்பொழுது சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை பாக்கெட்களில் போட்டு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பினார்கள்.

பிறந்த நாள்: பித்தளை டபரா செட் கொடுத்தார்கள். கால ஓட்டத்தில் மறந்துபோன பாத்திரம் இது. அதை மீண்டும் நினைவு படுத்தும் வகையில், அதைத் தேர்ந்தெடுத்து பதில் பரிசு பொருளாகக் கொடுத்து நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக அதை கொடுத்ததாகக் கூறினார்கள்.

பூணூல் சடங்கு: தோழியின் மகனுக்கு பூணூல் சடங்கு முடிந்ததும் அனைவருக்கும் மாடர்ன் ஹரிக்கேன் விளக்கு கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

மஞ்சள் நீராட்டு விழா: உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தபொழுது, விழா முடிந்ததும் மெஹந்தி பாக்கெட் மற்றும் கஸ்தூரி மஞ்சள் பாக்கெட் இரண்டையும் தாம்பூலத்துடன் வைத்து அனைவருக்கும் கொடுத்தார்கள்.

வளைகாப்பு: அஞ்சறைப் பெட்டிக்குள் மஞ்சள், குங்குமம் மேல் தட்டில் வெற்றிலை, பாக்கு உள்ளில் ஒவ்வொரு கிண்ணத்திலும் காப்பரிசி, பொரி, இனிப்பு, காரம்  என்று வைத்துக் கொடுத்தார்கள்.

திருமணம்: தோழி வீட்டுத் திருமணத்தில் வந்திருந்த அனைவருக்கும் உழக்கு, ஆழாக்கு என்பவற்றை தாம்பூலத்துடன் சேர்த்துக் கொடுத்தார்கள். ‘ஏன் இது மாதிரி பொருள்’ என்று என் தோழியிடம் கேட்டபொழுது, அவர் சொன்ன பதில் இது. ‘இப்பொழுது இளைய தலைமுறையினருக்கு உழக்கு, ஆழாக்கு என்றால் என்னவென்று தெரிவதில்லை. எல்லோரும் அளவைப் பொருளாகப் பயன்படுத்துவது டம்ளரைத்தான். ஆதலால் வித்தியாசமாக இருக்கட்டும் என்று இதைப் பரிசளிக்க தேர்ந்தெடுத்தேன்’ என்று கூறினார். சபாஷ்!

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் குறையாமல் உடல் எடை குறைய உதவும் 8 பானங்கள்!
Special at home? Do you want to give a gift?

சஷ்டியப்த பூர்த்தி: மஞ்சள், குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, ரிப்பன், ஜாக்கெட் பிட், இரண்டு மெட்டிகள் அனைத்தையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கொடுத்தார்கள்.

சதாபிஷேகம்: பித்தளை தாம்பாளத்தில் மங்களப் பொருட்கள் அனைத்தும் வைத்துக் கொடுத்தார்கள்.

நினைவு நாள்: 96வது வயதில் இயற்கை எய்திய முதியவரின் நினைவு தினத்தில் அவர் விரும்பிச் சாப்பிடும் பீங்கான் தட்டுகளை வாங்கி அனைவருக்கும் கொடுத்து அனுப்பினார்கள்.

இவற்றைப் பார்த்தபொழுது, நம் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு நாமும் வித்தியாசமான கலை மற்றும் பழைய, நவீன பொருட்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம் என்பதற்கான படிப்பினை இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது இல்லையா? அதற்காகத்தான் கற்றதும் பெற்றதுமாய் இந்தப் பதிவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com