நாம் ஆரோக்கியமாக இருப்பதற்குச் சமைக்கும் உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அந்த உணவைச் சமைக்கவும் பரிமாறவும் பயன்படுத்தும் பாத்திரங்களின் தூய்மை. பாத்திரங்களைளப் பளபளப்பாகக் கழுவிவிட்டால் மட்டும் போதாது, அந்தப் பாத்திரங்களைக் கழுவ நாம் பயன்படுத்தும் பொருள் சுத்தமாக இருக்கிறதா என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
பல வீடுகளில் பாத்திரம் கழுவும் நார் அல்லது ஸ்பாஞ்ச் நைந்துபோய், நூல் பிய்ந்து தொங்கும் வரை அதைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடியும். நாம் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருளே கிருமிகளின் கூடாரமாக இருந்தால், நாம் சாப்பிடும் தட்டில் கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும் அபாயம் உள்ளது.
கிருமிகளின் சொர்க்கம்!
பாத்திரம் கழுவும் பிரஷ் பார்ப்பதற்குச் சுத்தமாக இருப்பது போலத்தோன்றலாம். ஆனால் நாம் கழுவும் குழம்பு, எண்ணெய் பிசுக்கு மற்றும் உணவுத் துகள்கள் அந்த பிரஷ்ஷின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும். ஈரப்பதம் உள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் மிக வேகமாகப் பல்கிப் பெருகும்.
ஈ.கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற கொடிய கிருமிகள் இதில் தங்கி, அடுத்த முறை நாம் பாத்திரம் கழுவும்போது தட்டுகளில் பரவிவிடும். இது உணவு நச்சுத்தன்மை மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
சுத்தம்செய்யும் முறை!
பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், அதில் உள்ள சோப்பு நுரை மற்றும் அழுக்குகள் போகும் வரை சுத்தமான நீரில் அலசவேண்டும். குளிர்ந்த நீரை விடச் சுடுநீரில் அலசுவது இன்னும் சிறந்தது. வாரம் ஒருமுறை நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் சிறிதளவு வினிகர் கலந்து, அதில் உங்கள் ஸ்க்ரப்பர் அல்லது பிரஷ்ஷை பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். இந்த முறை அதில் உள்ள பிசுபிசுப்பு மற்றும் கிருமிகளை அழித்துவிடும். கழுவிய பிறகு அதை ஈரமாக அப்படியே சிங்க்கில் போட்டுவிடாமல், தண்ணீர் வடிந்து காயும் வகையில் நிமிர்த்தி வைப்பது அவசியம்.
ஒரு பொருளை வாங்தினால் அது தேயும் வரை பயன்படுத்த வேண்டும் என்ற சிக்கன குணம் இங்கு ஆபத்தானது. தினமும் பாத்திரம் கழுவுபவராக இருந்தால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பழைய பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதியதை வாங்க வேண்டும். குறைவாகப் பயன்படுத்துபவர்கள் நான்கு வாரங்கள் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் அதைப் பயன்படுத்துவது நோயை விலைக்கு வாங்குவதற்குச் சமம். பிரஷ்ஷிலிருந்து துர்நாற்றம் வீசினால் அல்லது அது பிசுபிசுப்பாக மாறினால், உடனே அதை மாற்றிவிடுவது நல்லது.
பஞ்சு Vs பிரஷ்!
பலருக்கும் ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதா அல்லது பிரஷ் பயன்படுத்துவதா என்ற குழப்பம் இருக்கும். மருத்துவ ரீதியாகப் பார்த்தால் பிரஷ் பயன்படுத்துவதே சிறந்தது. ஸ்பாஞ்சில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்துளைகள் நீரை உறிஞ்சி வைத்துக்கொள்வதால் அது காய்வதற்கு வெகு நேரம் ஆகும். ஆனால் பிரஷ் விரைவில் காய்ந்துவிடும். ஈரம் இல்லாத இடத்தில் கிருமிகள் உயிர்வாழ முடியாது. மேலும் பிரஷ்ஷை வெந்நீரில் கழுவிச் சுத்தம் செய்வதும் மிக எளிது.
சந்தையில் பல வகையான பிரஷ்கள் கிடைக்கின்றன. நைலான் இழைகள் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியவை. சுற்றுச்சூழலைக் காக்க நினைப்பவர்கள் தேங்காய் நார் பிரஷ்களைப் பயன்படுத்தலாம், ஆனால் அதை நன்கு காய வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். எல்லாவற்றையும் விடச் சிலிகான் வகை பிரஷ்கள் மிகச் சிறந்தவை. இதில் நுண்துளைகள் இல்லாததால் அழுக்கு தங்குவதில்லை, மேலும் இதைச் சுத்தம் செய்வதும் மிகவும் சுலபம்.