
நாம் நம் வீடுகளில் சமையல் செய்வதற்கு பல வகையான உலோகங்களினால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகப்படுத்தி வருகிறோம். பாத்திரங்களை உபயோகப்படுத்திய பிறகு அவற்றை சுத்தப்படுத்தவும் வெவ்வேறு வகையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். சமீப காலங்களில் நான்ஸ்டிக் கடாய், தோசைக்கல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பான் போன்ற பாத்திர வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பான்களை உபயோகித்த பிறகு எப்படி சுத்தப்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. நம் கைகளை சுட்டுக்கொள்ளாதிருக்க முதலில் உபயோகப்படுத்திய பானை நன்கு ஆற விடுங்கள். அதன் பிறகு சுடு நீரில் சோப்புத் தூளைப் போட்டு கரைத்து அந்த நீரை பான் நிறையும் வரை ஊற்றி அப்படியே சிறிது நேரம் விட்டு விடுங்கள். இந்த நேரத்தில் பானில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்கள் நெகிழ்ந்து வந்துவிடும். அதன் பிறகு கரடு முரடான, கோடு கிழிக்கும் தன்மையற்ற மிருதுவான ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்து பானை சுத்தப்படுத்திவிடலாம். பிறகு நன்கு கழுவிக் காயவைத்து எடுத்து வைத்து விடலாம்.
2. பானில் அதிகளவு கறைகள் வலுவாக ஒட்டிக் கொண்டிருந்தால் முதலில் கறைகள் வெளியில் தெரியாத அளவுக்கு பானில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும்போதே ஒரு மர ஸ்பூன் அல்லது ஒரு பிளாஸ்டிக் சுரண்டி (Scraper)யைக் கொண்டு வலுவாக ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் பிரிந்து வரும்படி ஸ்கிரப் செய்யுங்கள். முழு பலன் கிடைக்கவில்லையெனில் மீண்டும் ஒரு முறை இதேபோல் செய்யவும். ஒட்டிக்கொண்டிருந்த உணவுத் துகள்கள் முழுவதுமாக நீங்கிய பின், சோப்புத் தூள் கலந்த சூடான நீரால் நன்கு தேய்த்துக் கழுவி காய வைத்து எடுக்கவும்.
3. எண்ணெய் பிசுக்கும் உணவுத் துகள்களும் சேர்ந்து அடிப்பிடித்துக் கருகி பானில் ஒட்டிக் கொண்டிருந்தால் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயார் பண்ணுங்க. அந்தப் பேஸ்ட்டை கறை படிந்த இடங்களின் மீது முழுக்க நன்கு தடவி சிறிது நேரம் வைத்திருங்கள். அதன் பிறகு கோடு கிழிக்கும் தன்மையற்ற மிருதுவான ஸ்பாஞ்ச் வைத்து மெதுவாகத் தேய்த்துக் கழுவுங்க.
பேக்கிங் சோடாவுடன் லெமன் ஜூஸ் பிழிந்து கறை மீது தூவி, அந்த லெமன் தோலை வைத்தே தேய்த்துப் பிறகு கழுவி சுத்தப்படுத்தி விடலாம். மற்றொரு வழியாக, பார் கீப்பர்ஸ் ஃபிரண்ட் (Bar Keepers Friend) பவுடரின் உதவியையும் நாடலாம். இப்பவுடரைத் தூவி ஈரமான ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்தும் கறையை நீக்கி விடலாம்.
4. கறைகளை முற்றிலும் நீக்கி பானின் ஒரிஜினல் நிறத்தைக் கொண்டு வர மூன்று பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் சேர்த்துக் கலந்த கரைசலையும் பயன்படுத்தி, ஸ்பாஞ்ச்சினால் தேய்த்துக் கழுவி சுத்தமாக்கலாம். இம்முறையில், பானில் தண்ணீர் கொதிக்க வைத்ததினால் உண்டாகும் கறைகளும் நீங்கிவிடும்.
எந்த முறையில் பானை சுத்தப்படுத்தினாலும் கடைசியில் சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவி எடுத்து, காட்டன் துணியினால் அழுத்தித் துடைத்து வைப்பது அவசியம். இதனால் நீர்த் துளிகளின் கறையும் இல்லாமல் பானை பாதுகாக்கலாம்.