

நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை சேமித்து (Money savings) வைக்கும் அறிவும், ஞானமும் அவசியம் நமக்கு தேவை. செல்வத்தை அள்ளி தரக்கூடிய மகாலக்ஷ்மி நின்ற கோலத்திலும், ஞானத்தையும் அறிவையும் தரக்கூடிய சரஸ்வதி தேவி அமர்ந்த கோலத்திலும் காட்சியளிப்பார்கள்.
இதன் நுட்பமான அர்த்தமே, ஒருவருக்கு அறிவும், ஞானமும் கிடைத்தால் அது வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக இருக்கும் (சரஸ்வதி தேவி அமர்ந்த கோலம்). பணம் எவ்வளவு வேகமாக வருகிறதோ அதே வேகத்தில் சென்றுவிடும் என்பதை உணர்த்த தான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மகாலக்ஷ்மி.
செல்வத்தை நிலை நிறுத்தும் நுட்பத்தை நாம் அறிந்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் அது நம்மை விட்டு போகாது.
1. மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் அதனால் நானும் வாங்குவேன் என்று வாங்குவது அல்லது மற்றவர்கள் முன்பு நம்மை ஆடம்பரமாக காட்டிக்கொள்ள செய்யும் செலவுகள் உங்கள் வாழ்க்கையை ஏழ்மையான நிலைக்கு கொண்டுச் செல்லும். நீங்கள் லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் உங்களை ஏழ்மை நிலைக்கு கொண்டு செல்லும் இந்த பழக்கம்.
2. தள்ளுபடி போட்டு விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நமக்கு தேவையேயில்லாத விஷயங்களை வாங்குவது. இது பணத்தை சேமிக்க வைக்காமல், நம்மை அதிகமாக செலவு செய்ய வைக்கும் ஒரு நுட்பமான வியபாரமாகும்.
3. நம்முடைய முக்கியமான தேவைக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. மருத்துவ செலவு, திருமணம், வீடு கட்டுவது போன்றவற்றிற்காக கடன் வாங்கலாம். ஆனால், மற்றவர்களுக்காக நம்மை ஆடம்பரமாக காட்ட கடன் வாங்கி ஒரு விஷயத்தை செய்தால் அது நம்மை ஏழ்மையாக மாற்றிவிடும். எனவே, கடன் வாங்கும் பழக்கத்தை முற்றிலுமாக நாம் நிறுத்த வேண்டும்.
4. பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். பட்ஜெட் போட்டு செலவு செய்யும் போது எந்த விஷயத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று நமக்கு தெரியும். எந்த விஷயத்தை குறைத்துக் கொண்டு பணத்தை சேமிக்கலாம். கடைசியாக எவ்வளவு பணம் மீறும் போன்ற விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால், பட்ஜெட் போடாமல் செலவு செய்தால் மாசக்கடைசியில் பணம் நம் கையில் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
5. கூகுள் பே, ஜீபே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாக சில்லரை செலவுகள் அதிகமாக செய்துக் கொண்டிருப்போம். இதுவும் நம்மை ஏழ்மைக்கு தள்ளக்கூடிய ஒரு முக்கியமான பழக்கமாகும். இதுபோன்ற பழக்கத்தையும் நிறுத்த வேண்டும்.
6. விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது அதை சில வருட காலமாவது வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம். அடுத்து புதுமாடல் வந்து விட்டது என்று புதிதாக வாங்க செல்லக்கூடாது. தங்கத்தில் முதலீடு செய்தால் ஏறும். இதுவே போனை வாங்கிவிட்டு அடுத்த நாளே அதை கொடுத்தாலும், அதன் விலை குறைத்துக் கொண்டே பெற்றுக் கொள்வார்கள்.
நாம் செய்யும் செலவுகள் எதிர்க்காலத்தில் நமக்கு லாபமாக வரும்படி செலவு செய்ய முயற்சிக்க வேண்டும். குறைவாக சம்பாதித்தாலும் பட்ஜெட் போட்டு வாழும் போது செல்வந்தராக வாழ முடியும். இதுவே, லட்சலட்சமாக சம்பாதித்தாலும் ஆடம்பர செலவு செய்தால் ஏழ்மையான நிலையே ஏற்படும். இதை மனதில் வைத்துக் கொண்டு செலவு செய்வது அவசியமாகும்.