
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நெருங்கி வருவதால், பல மாணவர்கள் இப்போது தேர்வு பயம் மற்றும் மன அழுத்தத்தில் மூழ்கி உள்ளனர். இந்த மன அழுத்தத்தை சரியான உணவு முறையின் மூலம் குறைக்க முடியும் என்பது பலரும் அறியாத உண்மை. ஆம், உணவு பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் தேர்வு நேர மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்க முடியும்.
உணவுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, மாணவர்களின் மன நலனையும், அறிவாற்றல் திறனையும் மேம்படுத்துவதில் சத்தான உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமச்சீரான உணவு உட்கொள்வது மன அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கவனத்தையும், நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.
தேர்வு கால மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில உணவு முறைகளை இப்போது பார்ப்போம். கார்போஹைட்ரேட் உணவுகள் அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முழு தானியங்கள் நிறைந்த ரொட்டி, பழுப்பு அரிசி, கினோவா மற்றும் கோதுமை போன்ற உணவுகளில் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
மேலும், காய்கறிகள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. எனவே, மாணவர்கள் தங்கள் உணவில் அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மாவுச்சத்து குறைவான காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது. உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளைகா குறைப்பது நல்லது.
குடல் ஆரோக்கியம் மன நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இது மன அழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் சுரப்பை தூண்டுகிறது. எனவே, தயிர் போன்ற உணவுகளை உணவில் சேர்ப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் போதுமான தூக்கம் மற்றும் சமச்சீரான உணவு ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல உணவு மற்றும் சரியான தூக்கம், கற்றல் திறனை மேம்படுத்தி, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள உதவும். தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் தியானம் செய்வது அல்லது அமைதியான இசையை கேட்பது மனதை அமைதிப்படுத்த உதவும். மேலும், இரவு நேரங்களில் காஃபின் கலந்த பானங்களை தவிர்ப்பது தூக்கத்தை மேம்படுத்தும்.
மாணவர்களே, தேர்வு பயத்தை வெல்ல சத்தான உணவுகளை உட்கொள்வதோடு, போதுமான ஓய்வும் எடுங்கள். சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறலாம்.