ஒன்றாக ஒரு தோட்டத்தை வளர்க்கலாம்:
நம் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தச் சமயத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை சில கலைநயத்துடன் செய்துபார்த்தால் இன்னும் அவர்கள் ஆர்வத்துடன் செய்வார்கள். உதாரணத்துக்கு பழைய உடைந்த பாட்டில்களை வெட்டி எடுத்து அதில் மண்ணைக் கொட்டி சிறு சிறு செடிகளை வளர்த்து, அவற்றை நமது வீட்டு அறைகளில் மாட்டிவிட்டால் வீட்டிற்கும் அழகு சேர்க்கும் அதேநேரம் அது அவர்கள் மனதில் மறவாமல் நிலைத்தும் நிற்கும்.
தெரியாதவற்றைத் தெரியப்படுத்துங்கள்:
குழந்தைகளுக்கு இயல்பாகவே சுட்டித்தனங்கள் அதிகம். ஆகையால் ஒரே இடத்தில் அடைத்து வைப்பது அவர்களுக்கு நல்லதில்லை. அதனால் பெற்றோராகிய நீங்கள் சிறிது நேரத்தை ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அவர்களை எங்கேயாவது ஒரு tourist spot, அல்லது உங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மற்றும் புதிய புதிய ஊரின் கலாச்சாரங்கள், அதன் வரலாறுகள் பற்றிய செய்திகளை எடுத்துச் சொல்லி அறிவாற்றலைப் பெருக்க வழிவகை செய்யுங்கள். இதனால் அவர்களின் புத்தி கூர்மையும் கூடும். அதேநேரம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரம் கிடைக்கும்.
மனரீதியாகத் தயார்படுத்துங்கள்:
அவர்கள் எந்த ஒரு தவறான யோசனைகளிலும் ஈடுபடாமல் இருக்க அவர்களை ஏதோ ஒரு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்த்துவிடுவது நல்லது. அதிலும் நீ இதைத்தான் விளையாட வேண்டும் என்று கூறாமல், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப முயற்சி செய்து பார்க்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். காரணம் குழந்தைகளுக்கு ‘இதுதான் எனக்குப் பிடிக்கும்’ என்று தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. அதை நாம் தடுத்து விடக்கூடாது. எல்லாமே ஒரு வகையில் கற்பதுதான். அப்பொழுதுதான் அவர்களின் மனம் ஒருநிலைப்படும். இது அவர்களின் அடுத்தக்கட்ட உயர்வுக்கு பெரிய ஊன்றுகோலாக இருக்கும்.
எழுத்து மற்றும் கலை நயத்தை ஊக்குவிக்கவும்:
அவர்களுக்குப் பிடித்த கதையையோ, இல்லை அவர்களாக ஒரு கதையை எழுதவோ ஊக்குவித்து, அவர்களிடம் பேசி குழந்தைகளின் படைப்பாற்றலை தெரிந்துகொள்ள வேண்டும். பின் ஓவியக்கலை அல்லது வரையும் பயிற்சி போன்றவற்றைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களின் ஆற்றலைத் தெரிந்துகொள்ளலாம்! தொடர்ந்து, அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் எதையும் திணிப்பதாக இருக்கக்கூடாது. அவர்கள் உருவாக்கிய அந்த ஓவியமோ அல்லது ஏதோ ஒரு கலையோ அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். இதோடு சேர்த்து நடனம், இசை பயிற்சிகளில் ஈடுபடுத்திப் பாருங்களேன்.
இன்றைய குழந்தைகள் சோசியல் மீடியாவில் ஏதோ ஒரு கலையைப் பயன்படுத்தி தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள். ஆகையால் எல்லாமே ஒரு வகையில் முயற்சிதான். இறுதியில் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் ஒரு கூடுதல் திறமையாக இருந்து வாழ்க்கையின் வெற்றிப் பயணத்திற்குக் கைகொடுக்கும்.
கற்கும் வயதில் கற்றால்தான் அதற்கு பலன். பின் வேறு எப்போ கற்க இயலும்? இது அவர்கள் அடுத்தடுத்து வகுப்புகளையும் சிரமமின்றி கடந்து வர வழிவகுக்கும். எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பிடிமானமாகத் திகழும்.