
"ஃபேன்" என்ற சொல் தமிழில் மின்விசிறி, விசிறி, அல்லது காற்றாடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோடை காலமோ? வெயில் காலமோ? எந்த பருவ காலமாக இருந்தாலும் அறைக்குள் காற்றோட்டம் சீராக நிலவ மின் விசிறி அவசியமானது. எந்த அறையாக இருந்தாலும் மின் விசிறி இல்லாமல் சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது. மின் விசிறிகளை பொறுத்தவரை டேபிள் ஃபேன், சீலிங் ஃபேன், பெடஸ்டல் ஃபேன், பி.எல்.டி.சி ஃபேன் என பல ரகங்கள் இருக்கின்றன. அவற்றின் வேறுபாடு, பயன்பாடு பற்றியும், எது சிறந்தது என்பது பற்றியும் பார்ப்போம்.
டேபிள் ஃபேன்: அளவில் சிறியதாகவும், கையடக்கமாகவும் இருப்பதால் விரும்பிய அறைகளுக்கு விரும்பிய நேரத்தில் எடுத்து சென்று பயன்படுத்தலாம். மற்ற ஃபேன்களை விட அதிக சத்தம் கொடுக்காதவை.
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காற்றை குவியச் செய்ய ஏற்றது. சிறிய, உயரம் குறைவாக உள்ள அறைகளுக்கு பயன்படுத்த சிறந்தது.
பெடஸ்டல் ஃபேன்: உயரமான வடிவம் கொண்ட இவை பெரிய அறைகளுக்கு ஏற்றவை. தேவைப்படும் இடத்திற்கு காற்றோட்டத்தை துல்லியமாக அளிக்க வல்லவை. டேபிள் ஃபேன்களை விட அதிக சக்தி வாய்ந்த ஆற்றலுடன் செயல்படும். அதனால் காற்றின் அளவும் அதிகரிக்கும்.
சீலிங் ஃபேன்: எல்லா அறைகளிலும் பிரதானமாக இடம் பிடிக்கும் மின் விசிறி இது. அறையின் மூலைமுடுக்கெல்லாம் காற்றை பரப்பும் திறன் கொண்டது. தொடர்ச்சியாக காற்றை வெளியிடக்கூடியது. டேபிள், பெடஸ்டல் பேனுடன் ஒப்பிடும்போது காற்றின் குளிர்ச்சி தன்மை குறைவாக இருக்கும்.
பி.எல்.டி.சி. ஃபேன்: சீலிங் ஃபேன் போலவே செயல்பாடு கொண்டிருக்கும் இது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கக் கூடியது. மற்ற மின் விசிறிகளை ஒப்பிடும்போது மின் சிக்கனம் கொண்டது. அறை அதிக குளிர்ச்சியாகி ஏ.சி.யை ஆப் செய்யும்போது, மின் விசிறியை இயக்க எழுந்திருக்காமல் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி விடலாம் என்பதால் ஏ.சி. அறைக்கு பயன்படுத்த ஏற்றது.
எந்த மின் விசிறி சிறந்தது?
அறையின் அளவு, காற்றோட்ட தேவை, பயன்படுத்தும் நேரம் முதலிய தேவைகளை பொறுத்து மின் விசிறியின் தேர்வு மாறுபடும்.
அறையின் எல்லா பகுதியிலும் காற்று சுழற்சி இருக்க வேண்டும் என்றால் சீலிங் பேனை தேர்வு செய்யலாம்.
அத்துடன் மின் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பி.எல்.சி.டி. பேனுக்கு மாறலாம்.
குறிப்பிட்ட இடத்திற்கு, தமது உடல் பகுதிக்கு மட்டும் காற்று சுழற்சி நீடிக்க வேண்டும் என்றால் பெடஸ்டல், டேபிள் பேனை தேர்வு செய்து கொள்ளலாம்.
சீலிங் பேனை விட டேபிள் ஃபேன் அதிக மின்சாரத்தை செலவிடுமா?
நிறைய பேர் டேபிள் ஃபேன்தான் அதிக மின்சாரத்தை செலவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் டேபிள் ஃபேன்கள் சீலிங் பேனை விட குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. அதாவது சீலிங் ஃபேன் 70 முதல் 90 வாட்ஸ் வரை மின்சாரத்தை செலவிடும்போது டேபிள் ஃபேன் 30 முதல் 60 வாட்ஸ் வரையே மின்சாரத்தை செலவிடும். இப்போது பி.எல்.டி.சி. ஃபேன்கள் அந்த குறையை போக்கும் விதமாக மின் சிக்கனத்தை கொண்டிருக்கின்றன.