கடினமான வேலைகளைக் கூட சுலபமாக செய்ய உதவும் 6 உத்திகள்!

motivation article
motivation articleImage credit - pixabay.com
Published on

வேலை செய்ய தொடங்கும்போது கடினமான வேலைகளை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவற்றை தள்ளி வைத்துவிட்டு எளிதான வேலைகளை செய்வது பலரின் பழக்கம். ஆனால் நேரமாக ஆக, கடினமான வேலை செய்வதில் ஆர்வம் குறைந்து அதை செய்யாமலேயே விட்டுவிடும் அபாயமும் ஏற்படும். இந்த பதிவில் கடினமான வேலைகளைக் கூட எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

1. கடினமான வேலை என்று நினைக்காதீர்கள்

முதலில் செய்யப்போகும் வேலை கடினமானது என்று நினைக்க வேண்டாம். அதுவும் செய்யக்கூடிய ஒரு எளிதான வேலையே என்று மனதளவில் நினைக்க வேண்டும். அப்போதுதான் அதை செய்வதில் ஆர்வம் உண்டாகும். உதாரணமாக 100 பக்கத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது இம்சையான வேலை, கடினமான சுவாரசியமற்ற வேலை என்று நினைக்கத் தொடங்கும் போது அந்த வேலையைப் பற்றி நினைத்தாலே வெறுப்பு ஏற்படும். அப்படி இல்லாமல் ‘நான் செய்யப்போவது ஒரு சுவாரஸ்யமான வேலை’ என்று நினைக்க வேண்டும். அதனால் இயல்பாக அதன் மேல் ஒரு ஆர்வம் உண்டாகும்.

2. ரோபோ போல செய்ய ஆரம்பிக்கவும்;

கடினமான வேலையை உடனே அமர்ந்து ரோபோ போல செய்யத் தொடங்கி விடுங்கள். மனதில் எழும் தேவை இல்லாத எண்ணங்களை அடக்கிவிட்டு வேலையை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் இதை செய்யலாமா வேண்டாமா என்று மனம் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விடும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் வேலையை தொடங்கிவிடவும். 

3. சிறிய பகுதிகளாக பிரித்துக் கொள்ளுதல்;

100  பக்க ஆய்வுக் கட்டுரையை முதலில் சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். முன்னுரை, அத்தியாயங்கள், முடிவுரை என்று அதனுடைய வடிவத்தையும், அதை எப்படி எழுத போகிறீர்கள் என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதற்குத் தேவையான தகவல்களை சேகரித்துக் கொள்ள வேண்டும்.  இன்றைக்கு ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று ஒரு இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஐந்து பக்கங்களை மட்டும் இன்று எழுதி முடித்தால் போதுமானது. வேறு அதை பற்றியும் சிந்திக்கத் தேவையில்லை.

4. காலக்கெடு (டெட்லைன்) நிர்ணயித்தல்;

பல காலக்கெடுக்களுடன் ஒரு பெரிய செயலை செய்ய தொடங்க வேண்டும். அதாவது ஒரு பெரிய வேலையை சிறிய பகுதியாக பிரித்துக் கொண்டு, அதனுடைய 25% வேலையை 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும், 50% ஐ இருபதாம் தேதிக்குள் முடிக்கணும். முழு வேலையும் 30 நாட்களில் முடிக்க வேண்டும் என்கிற மாதிரியான காலக் கெடுவை உருவாக்கி செய்யத் தொடங்கிவிட்டால் எவ்வளவு கடினமான வேலையும் எளிதாக முடித்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு வித்திடுவது எது தெரியுமா?
motivation article

5. பொமொடோரோ நுட்பத்தை பயன்படுத்துதல்;

ஜப்பானிய நுட்பமான பொமொடோரோவை பயன்படுத்த வேண்டும். 25 நிமிடங்கள் வேலை செய்யவும். பின்பு 5 நிமிடம் பிரேக் எடுத்துக் கொள்ளவும். இதே போல நான்கு முறை வேலை செய்த பின் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். அது 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த டெக்னிக் மனதிற்கு உடலுக்கும் உற்சாகத்தை தந்து வேலையை மிக விரைவில் செய்ய வைக்கும்.

6. நேர்மறையாக இருத்தல்;

எப்போதும் நேர்மறையாக மனதை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல சிறிய இலக்குகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது தனக்குத்தானே சிறிய வெகுமதி கொடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆறு உத்திகளும் கடினமான வேலையைக் கூட எளிதாக செய்ய உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com