

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வது வழக்கம். அந்தப் புனிதமான திருமண வைபவத்தை சிறப்பாக நடத்தவேண்டும் என்ற ஆவலில், எத்தனை முறை பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சில விஷயங்கள் தவறிவிடுவது இயல்பானதே.
அத்தகைய தவறுகளைத் தவிர்த்து, திருமணப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க, முன்கூட்டியே ஒரு திட்டமிட்ட பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொண்டு செயல்பட்டால், வேலைகள் எளிதாகவும் சீராகவும் நடைபெறும். அந்த வகையில், திருமண ஏற்பாடுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கே பார்ப்போம்.
மாப்பிள்ளை / மணப்பெண் தேர்வு
வீட்டில் முதலில் மாப்பிள்ளையோ அல்லது மணப் பெண்ணோ தேடும் பணியை தொடங்கவேண்டும். அதற்காக நம்பகமான, தகுந்த திருமண தகவல் மையங்களைத் தேர்ந்தெடுத்து முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஜாதகக் கட்டம், கல்வி, வேலை, குடும்ப விவரம் போன்ற தேவையான தகவல்களுடன், சமீபத்திய நல்ல புகைப்படத்தையும் இணைத்து வழங்குவது அவசியம்.
ஜாதகப் பொருத்தம் மற்றும் குடும்பக் கலந்துரையாடல்
பெண் அல்லது மாப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டவுடன், ஜாதக பரிமாற்றம் செய்து, பொருத்தம் பார்த்து, இரு குடும்பங்களும் நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும். இதன் பின்னர், திருமணத்திற்கான நல்ல நாளை குறிக்கலாம்.
திருமண மண்டபம்
இன்றைய காலகட்டத்தில் திருமண மண்டபங்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இரு குடும்பங்களுக்கும் ஏற்ற, வசதியான மண்டபத்தைத் தேர்வு செய்ய வேண்டும். வருகை தரும் உறவினர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முடிவு செய்தால், நெரிசல் இல்லாமல் விழா இனிதே நடைபெறும்.
உணவு ஏற்பாடு (Catering Services)
திருமண விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் திருப்தியுடன் உணவருந்தி செல்லும் வகையில், வயது மற்றும் சுவை விருப்பங்களை கருத்தில் கொண்டு மெனுவைத் தேர்வு செய்யவேண்டும். அனுபவமிக்க, நம்பகமான உணவு தயாரிப்பாளர்களிடம் இந்தப் பணியை ஒப்படைப்பது சிறந்தது. மேற்சொன்ன மூன்று பணிகள் நிறைவேறினாலே, திருமண ஏற்பாடுகளில் பாதி வேலை முடிந்தது போல உணர்வு ஏற்படும்.
மணமகள் – மணமகன் உடைத் தேர்வு
இருவருக்குமான திருமண உடைகளை, இரு குடும்பத்தாரும் மற்றும் சில முக்கிய உறவினர்கள் மட்டும் இணைந்து தேர்வு செய்யலாம். திருமண உடைகள் தயார் ஆக கால அவகாசம் தேவைப்படுவதால், முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்வது அவசியம்.
அழைப்பிதழ் மற்றும் அழைப்பு பணிகள்
திருமண அழைப்பிற்குச் செல்லும்போது, அழைக்க வேண்டியவர்களின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து வைத்தால், யாரையும் தவற விடாமல் அழைக்க முடியும்.
தாம்பூலத்துடன் ரிட்டர்ன் கிப்ட்
இன்றைய காலத்தில் தாம்பூலத்துடன் ரிட்டர்ன் கிப்ட் வழங்கும் பழக்கம் இருப்பதால், அதற்கான பரிசு என்ன, எவ்வளவு எண்ணிக்கையில் தேவை என்பதையும் திட்டமிட்டு ஆயத்தப்பணிகளைச் செய்யவேண்டும்.
மேலும், திருமணத்திற்கு முன்பும் பின்பும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கான தங்கும் வசதி, அறை ஒதுக்கீடு ஆகியவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்தல் நல்லது.
அதேபோல், திருமணத்திற்கு முன் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பங்கேற்க வேண்டிய உறவினர்களின் பட்டியலைச் சரிபார்த்து, யாரேனும் விடுபட்டுள்ளனரா என்று செக் செய்து கொள்வது, மன நிறைவைத்தரும்.