

நாடு முழுவதும் பொதுத்தேர்வு விரைவில் ஆரம்பிக்கப்போகிறது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் டென்ஷனோடு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் JEE, NEET, CLAT போன்று பலவிதமான என்ட்ரன்ஸ் எக்ஸாமும் நடக்க இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து மாணவர்களை பதற்ற நிலைக்கு தள்ளுகின்றன. ஒரு பக்கம் பொதுத் தேர்வு, மற்றொரு பக்கம் என்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்னொரு பக்கம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் மனதில் போட்டுக் கொண்டு மாணவர்கள் படும் பாடு அப்பப்பா ஏராளம்.
பெற்றோர்களே, ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொதுத் தேர்வில் வரும் மதிப்பெண்ணை வைத்தோ அல்லது என்ட்ரன்ஸ் எக்ஸாமில் வரும் மதிப்பெண்ணை வைத்தோ, நாம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிச்சயமாக கணிக்க முடியாது. வெறும் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு தன்னுடைய சுய உழைப்பால் எத்தனையோ பேர் கோடீஸ்வரார்களாக ஆகி இருக்கிறார்கள். எல்லோராலும் கோடீஸ்வரனாக ஆகமுடியும் என்று சொல்ல முடியாது. அப்படி ஆகவேண்டும் என்ற அவசியமுமில்லை. நம்முடைய வாழ்க்கைக்கு நமக்கு என்ன தேவையோ அதற்கேற்ற ஒரு வேலை கிடைத்தாலே போதுமானது. இதை நீங்கள் மனதில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தனக்குதானே ஒரு எதிர்பார்ப்பை மனதில் விதைத்து வைத்துக்கொண்டு அது மரம்போல் வளர்ந்து, நீங்க நினைத்தது போல் உங்கள் மகனோ/மகளோ ஆகவில்லை என்றால் அந்த வெறுப்பை குழந்தைகள் மீது திணிப்பதில் என்ன அர்த்தம்?
குறிப்பாக இந்த பொது தேர்வின்போது ஒரு சில பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் டார்ச்சர் கணக்கே இல்லை. அந்த குழந்தைகள் சாப்பிட வந்தால் கூட எத்தனை நேரமாக சாப்பிடுவாய் போதும், போதும், எழுந்திரு என்று ஆவேசமாக கத்துவார்கள். இதை போல அவர்களிடம் தயவு செய்து பரீட்சைக்கு முன்னால் நடந்து கொள்ளாதீர்கள். எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்ற டிப்ஸை இப்பதிவில் காணலாம்.
ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களிடம் சென்று சிறிது அன்போடும் ஜோக்காகவும் பேசி அவர்களை சிரிக்க வையுங்கள்.
அவர்களுக்கு பாடத்தில் ஏதாவது புரியவில்லை என்றால் உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்துகொடுங்கள். அதாவது கூகுள் மூலமாக தேடியோ , அல்லது உங்கள் குழந்தைகளுடைய ஆசிரியரை அணுகியோ அல்லது தெரிந்தவர்களை அணுகியோ அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஏதாவது ஒரு பாடத்தில் குறிப்பிட்ட சாப்டர் அவர்களுக்கு கடைசிவரை புரியவில்லை என்றால் அதை கட்டாயப்படுத்தாதீர்கள். உனக்கு எத்தனை தெரிகிறதோ அத்தனை எழுதிவிட்டு வா.. மற்ற சாப்டரை நன்றாக படித்துக்கொள் என்று கூறுங்கள். அவ்வாறு கூறுவதால் அவர்களுக்கு உள்ளே இருக்கும் பயமானது முற்றிலும் விலகிவிடும்.
அவர்கள் சாப்பிட வரும்போது முற்றிலும் பரீட்சையை பற்றி எதுவும் பேசாமல் அவர்களுக்கு விரும்பியதை சமைத்துக்கொடுத்து அன்போடு பரிமாறி அவர்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
பொதுத்தேர்வு ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கோ அல்லது உங்களுக்கு எந்த கோவில் மிகவும் பிடிக்குமோ அந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வாருங்கள்.
தேர்வு ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்பு அவர்களை ஏதாவது ஒரு ஹோட்டலுக்கோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிற்கோ சென்று ரிலாக்ஸ் ஆக இருந்துவிட்டு வாருங்கள்.
தேர்வு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சன்று ஒரு ஜென்ரல் செக்கப் செய்யவும். ஒருவேளை அவர்கள் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளையும் டானிக்கையும் வாங்கி அவர்களுக்கு கொடுக்கவும்.
தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அதைப்பற்றி அடிக்கடி கேட்காதீர்கள் நன்றாக போனதா என்று ஒரே வார்த்தை அதுவும் ஒருமுறை கேளுங்கள்.
ஒரு பாடத்திற்கான தேர்வு முடிந்தவுடன் அடுத்த பாடத்தை படிக்கப் போவதற்கு முன்னால் சிறிது அவர்களுக்கு ஓய்வெடுக்க சம்மதியுங்கள். பரீட்சை முடித்து வீட்டிற்கு வந்தவுடனேயே அடுத்த பாடத்தை படி படி என்று கூறாதீர்கள்.
தினமும் தேர்வு எழுத கிளம்பும்போது நீங்களும் அவர்களுடைய bag-ஐ செக் பண்ணுங்கள். அட்மிட் கார்டு, பென், பென்சில் என எல்லாம் இருக்கிறதா என ஒரு தடவை நீங்களே பாருங்கள். கிளம்பும் நேரத்தில் அவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி டென்ஷன் ஆக்காதீர்கள்.
பொதுத்தேர்வு எக்ஸாம் முடியும் வரை என்ட்ரன்ஸ் எக்ஸாமை பற்றி எதுவும் பேசாதீர்கள்.. முதலில் முக்கியமான பரீட்சையை எழுதி முடிக்கட்டும். பிறகு எண்ட்ரன்ஸ் எக்ஸாமிற்கு அவர்கள் தயாராக தேவையான ஆலோசனையை சொல்லுங்கள்.
பெற்றோர்களே, மேற்கூறிய டிப்ஸ்களை எல்லாம் முடிந்தவரை பின்பற்றி நீங்களும் டென்ஷன் ஆகாமல் குழந்தைகளையும் டென்ஷனாக்காமல் தேர்வை எழுதி வெற்றிபெற உதவி புரியுங்கள்.