கடைக்காரர்கள் சொல்லாத சோபா ரகசியங்கள்... ஏமாறாமல் இருக்க இதை படியுங்கள்!

Sofa Buying Tips
Sofa Buying Tips
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் நம் கண்களில் படுவது வரவேற்பறைதான். அந்த வரவேற்பறையின் அழகைத் தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது நாம் பயன்படுத்தும் இருக்கைகள் அல்லது சோபா செட்களே ஆகும். விருந்தினர்கள் வரும்போது அமர்ந்து பேசுவது முதல், விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது வரை, சோபா என்பது நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. 

பலரும் கடையின் முகப்பில் இருக்கும் சோபாவின் அழகைப் பார்த்து மயங்கி, அதை வீட்டுக்கு வாங்கி வந்த பிறகு சிரமப்படுவார்கள். சோபா என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு நீண்ட கால முதலீடு. எனவே, அவசரப்படாமல் ஒரு சில அடிப்படை விஷயங்களைக் கவனித்து வாங்கினால், பணமும் மிச்சம், வீடும் அழகுபெறும்.

இடவசதி, அளவீடு!

சோபா வாங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய முதல் வேலை, அதை வைக்கப்போகும் இடத்தைத் துல்லியமாக அளவிடுவது. கடைகளில் அல்லது ஷோரூம்களில் இருக்கும் சோபாக்கள் பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றலாம். காரணம், அந்தக் கடைகளின் பரப்பளவு மிகப்பெரியது.

ஆனால் அதே சோபாவை நம் வீட்டு ஹாலில் கொண்டு வந்து வைக்கும்போது, அது மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. நடப்பதற்குக்கூட இடமில்லாமல் செய்துவிடும் பிரம்மாண்டமான சோபாவை விட, அறைக்கு ஏற்ற கச்சிதமான சோபாவே சிறந்தது. நாம் அமர்வதற்குச் சோபா எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அறைக்குள் தாராளமாக நடமாடுவதற்கான இடைவெளியும் ஆகும்.

வடிவமைப்பும் பயன்பாடும்!

அடுத்ததாகக் கவனிக்க வேண்டியது அதன் வடிவம். L வடிவ சோபா வேண்டுமா அல்லது யு U வடிவ சோபா வேண்டுமா என்பதை அறையின் மூலைகளைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். சோபாவை எதற்காக அதிகம் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதில் தெளிவு வேண்டும். சிலர் மாலை நேரத்தில் படுத்து ஓய்வெடுக்கப் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு மெத்தென்ற குஷன் சோபாக்கள் ஏற்றது. 

வெறும் விருந்தினர்களுக்காக மட்டும் என்றால் மரத்தாலான இருக்கைகள் போதுமானது. அதேபோல, வீட்டில் சிறு குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் இருந்தால், வெளிர் நிறங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். அழுக்கானால் எளிதில் துடைக்கக்கூடிய வகையிலான துணிகளைத் தேர்ந்தெடுப்பது பராமரிப்பை எளிதாக்கும்.

இதையும் படியுங்கள்:
கண் திருஷ்டி மற்றும் வீட்டின் எதிா்மறை ஆற்றல் விலகி ஓட எளிய பரிகாரம்!
Sofa Buying Tips

தரம்!

லெதர் சோபாக்கள் பார்ப்பதற்குப் பணக்காரத் தோற்றத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சரியான பராமரிப்பு இல்லையென்றால் அதில் கீறல்கள் விழுந்து விரைவில் பாழாகிவிடும். மேலும், வெயில் காலங்களில் லெதர் சோபாக்களில் அமர்வது அசௌகரியமாக இருக்கலாம். 

அதற்கு பதிலாக, ஃபேப்ரிக் எனப்படும் துணி வகை சோபாக்கள் அமர்வதற்கு சுகமாக இருக்கும், ஆனால் தூசி படியும் வாய்ப்பு அதிகம். மரச் சாமான்களைப் பொறுத்தவரை, தேக்கு போன்ற உறுதியான மரங்களில் செய்யப்படும் சோபாக்களே தலைமுறைக்கும் உழைக்கும். எனவே, வீட்டின் தட்பவெப்ப நிலை மற்றும் பராமரிக்கும் வசதிக்கு ஏற்ப மூலப்பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டின் தோற்றத்தையே மாற்றும் விதவிதமான சோபா கவர்கள்!
Sofa Buying Tips

வண்ணங்கள்!

வீட்டின் சுவர்களுக்கு அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட் நிறத்திற்குப் பொருத்தமான நிறத்தில் சோபாவைத் தேர்ந்தெடுப்பது வீட்டின் அழகைக் கூட்டும். சுவர்கள் வெளிர் நிறத்தில் இருந்தால், சோபா அடர் நிறத்தில் இருப்பது எடுப்பாக இருக்கும். ஏற்கனவே திரைச்சீலைகள் மற்றும் தரை விரிப்புகள் டிசைன்களோடு இருந்தால், சோபாவைத் தனி நிறத்தில் வாங்குவது கண்ணுக்கு உறுத்தலாக இருக்காது. மரச் சோபாக்களில் பட்டுத் துணியால் ஆன உறைகளைப் போடுவது பாரம்பரியமான அழகைத்தரும்.