பதற்றம் சக்தியின் எமனா?

பதற்றம் சக்தியின் எமனா?

‘என்னால முடியவே இல்லை; ரொம்ப களைப்பாயிருக்கு!’ என்ற தராக மந்திரம் புகுந்து புறப்படாத வாயே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் ஜான் ஸிண்ட்லர் என்ற மேலைநாட்டு மனோதத்துவஞானி.

அசுர வேகத்தில் தலைகால் புரியாமல், செயல்படும் நகர்ப்புற மக்கள் எல்லோருக்குமே ஏதோ ஒருவிதத்தில் பதற்றமும், கவலையும் நேரிட்டு, களைப்படைந்து விடுகின்றனர். சக்தி அபரிமிதமாக செலவழிக்கப் படுவதாலேயே ‘டென்ஷன் ’ ஏற்படுகிறது. குறிப்பாக இன்றைய மகளிர் காரியாலயப் பணி, வீட்டுப் பணிகளுக்கிடையே நசுக்கப்படுவதால், சீக்கிரத்திலேயே இளமையை இழந்து  முதுமை அடைகின்றனர் என்று அவர் வருத்தப்படுகிறார்.

அதற்கு ஐந்துவித பரிகாரங்களையும்  இங்கே தெரிவித்துள்ளார்.

1. உங்கள் உடல் அமைப்பை முதலில் கவனியுங்கள்:

டலின் உறுப்புகளுக்குச் சீரான பணியை, சமமான வேலையை அளிப்பதன் மூலம், உடல் சக்தியை சேமிக்கலாம். உதாரணமாக நிற்கும்பொழுது, இரண்டு கால்களும் சீரான நிலையில் இருத்தல் வேண்டும். ஒரு காலைச் சுவற்றில் மேல் ஊன்றி, மறு காலைத் தரையின் மேல் வைப்பது, சக்தி விரயமாவதற்கு வழியாகும்.

இக்கருத்தை முன்னிட்டுத்தான், நம் முன்னோர்கள், ஒற்றைக் காலில் நிற்பது, ஒரு கையைத் தரையின் ஊன்றிக்கொண்டு அன்னம் புசிப்பது, மோவாயில் கையை வைத்து அழுத்திக்கொள்வது போன்ற விஷயங்களை சாஸ்திரபூர்வமாகத் தவறு என்று நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.

2. கூடுமானவரை உங்கள் அசைவுகளை சிக்கனப்படுத்துங்கள்.

சொல்லில், செயலில் சிக்கனத்தைக் கடைபிடிப்பதன் மூலம், சக்தியை மிச்சப்படுத்தலாம். சிலர் நாற்காலியில் உட்காரும்பொழுது, காலை அனாவசியமாக ஆட்டிக் கொள்ளுதல், நாற்காலியைக் காரணமின்றி முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளிக் கொள்ளுதல் போன்ற வேண்டாத செய்கைகைளச் செய்வார்கள்.

மற்றும் சிலர், அனாவசியமாக உதட்டைக் கடித்துக் கொள்ளுதல், நாக்கினால், உதட்டை ஈரப்படுத்திக் கொள்ளுதல், முகத்தைத் தேய்த்துக்கொண்டே இருப்பது போன்ற நடவடிக்கைகளினால், சக்தியை பெரும் அளவிற்கு இழக்கின்றனர்.

நம் முன்னோர்கள், நம் உடல்நலன் கருதியே, அதிர்ந்து பேச வேண்டாம். நடக்க வேண்டாம் என்று புத்திமதி கூறியுள்ளனர்.  (குறிப்பாக மகளிருக்கு.)

நாளைக்குச் செய்ய வேண்டிய பணிகளுக்கு இன்றிரவே திட்டமிட்டு, எல்லாவற்றையும் தயாரான நிலையில் வைத்துக் கொண்டோமானால், குழப்பமும், கவலையும், பதற்றமுமின்றி, வாழ்க்கைப் படகு அமைதியான நிலையில் பயணிக்கும்.

3. ஓய்வை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்

‘ஓய்வு’ என்றால் படுக்கையில் விழுந்துகிடப்பது என்று எண்ண வேண்டாம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்க வடிகால்தான் ‘யோகாசனம்’ என்கிறார் உலகப் புகழ் பெற்ற யோகாசன சக்கரவர்த்தி B.K.S. ஐயங்கார். மனமும், உடலும், சம்மான நிலையில் ஓய்வு பெற யோகாசனத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்கிறார் அவர்.

சுத்தமான காற்றை மெதுவாக சுவாசித்து வெளியிடுவதின் மூலம் (பிராணாயாம்) உடலின் உள் உறுப்புகளுக்கு ‘மசாஜ்’ கிடைக்கிறது. எனவே, ரத்த ஓட்டம் சீரான பாதையில் சவாரி செய்ய எளிமையாகிறது. இதற்கென்று தனிப்பட்ட கால நேரம் தேவையில்லை. பணியில் ஈடுபட்டிருக்கும்போதுகூட இதைச் செய்யலாம். இந்த யோகா மூலம், உடல் ஆரோக்கியம் வனப்பு, சுறுசுறுப்பு, மகிழ்ச்சி, திறமை, தன்னம்பிக்கையாவும் அடையலாம்.

4. மனநிலை சீரான நிலையில் இருக்கட்டும்:

னத்திற்கும், உடலுக்கும் ஒரே சக்திதான் தேவைப் படுகிறது. அதனாலேயே மனம் சோர்ந்து, உளைச்சல் ஏற்படும்பொழுது, உடலுக்கும் அசதி ஏற்படுகிறது. சில சமயங்களில் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள், பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமென்பதற்காக,

“ஜாக்கிரதை, இது ‘பப்ளிக்’ ஞாபகமிருக்கட்டும்” என்ற பல்லவியை அடிக்கடிப் பாடுவதன் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியமான மனத்தில் ‘பய வித்தை’ ஆழமாக நட்டுவிடுகின்றனர்.

இத்தகைய குழந்தைகளுக்குத்தான் பரீட்சை எழுதும்போது, உள்ளங்கையில் வியர்வை ஆறாக ஓடி, பரீட்சைத் தாள்களையே அதில் மிதக்கவிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது. மனத்தைப் பாதிக்கக்கூடிய கோபம், பொறாமை, கசப்பு உணர்ச்சி (வெறுப்பு), கவலை போன்ற துர்குணங்களுக்கு இடம் கொடுக்காமல் ‘சாந்தமு லேகா, செளக்யமு லேது’ என்ற தியாக பிரம்மத்தின் கீர்த்தனை மனத்தில் எப்பொழுதும் நினைவு கூர்ந்தால், நம் வாழ்க்கை சொர்க்கமாகும்.

5. எங்கும் எதிலும் மகிழ்ச்சியைக் காணுங்கள்:

“நான் இன்று அமைதியாகவும், உற்சாகமாகவும் இருக்கப் போகிறேன்” என்று அமுத வாக்கியத்தை அடிக்கடி முணுமுணுத்துக் கொள்வதோடு அதை ஒரு பெரிய அட்டையில் கொட்டை எழுத்துகளில் எழுதி உங்கள் பார்வையிலும் மற்றவர்கள் பார்வையிலும் படும்படி மாட்டி வையுங்கள். பாட்டரி தீர்ந்து போனால் டார்ச்சிற்கு புது பாட்டரி போடுவது போல, நம் உடலில் சக்தி தீர்ந்துவிடும் பொழுது ‘தியானம்’ என்ற பாட்டரியை போட்டு இழந்த சக்தியை ஏன் பெறக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com