தாய்ப்பால் கட்டிக்கொள்வதன் காரணமும் நிவாரணமும்!

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்https://thekarigai.com
Published on

பிறந்த குழந்தை ஆரோக்கியமாகவும், நன்கு வளரவும் தாய்ப்பால் மிகவும் அவசியம். புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் பால் கட்டிக்கொள்ளும் பிரச்னை நிச்சயம் ஏற்படும். பொதுவாக, பால் கட்டிக்கொள்வது என்பது இளம் தாய்மார்கள் ஒரு பக்க மார்பில் மட்டும் பால் கொடுத்து, மற்றொரு பக்கம் கொடுக்காவிட்டால் ஏற்படும். குழந்தைக்கு இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும்.

குழந்தை சரியாக பால் குடிக்காமல் போனாலோ, பால் அதிக அளவில் சுரக்கும் போதோ கட்டிக்கொள்ளும். இது சாதாரணமானதுதான் என்றாலும், இதனால் ஏற்படும் வலி மிகவும் அதிகம். சிலருக்கு ஜுரம் கூட வந்து விடும். குழந்தை முழுவதுமாக பால் குடிக்காமல் சில சமயம் தூங்கிவிடும். அந்த மாதிரி சமயங்களில் கூட மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது உண்டு. குழந்தையை சரியான பொசிஷனில் வைத்து பால் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தை சரிவர குடிக்காது.

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தாலும் பால் மார்பகங்களில் கட்டிக் கொள்ளும். இதனை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு கைகளால் மார்பகங்களை சிறிது மசாஜ் செய்து விட்டு கொடுக்க பால் கட்டாது. அதேபோல், பால் கட்டிக்கொண்டு கனத்து இருந்தால் மென்மையாக அழுத்தி கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும்.

துவரம் பருப்பு சிறிது, பாசிப்பயறு சிறிது இரண்டையும் விழுதாக அரைத்து தண்ணீரில் கரைத்து மார்பில் பத்து போட, கட்டியுள்ள பால் சுலபமாக வெளியேறும். சூடான நீரில் திக்கான டவலை (துண்டு) நனைத்து பால் கட்டியுள்ள மார்பகத்தில் ஒத்தடம் கொடுக்க, நல்ல பலன் கிடைக்கும்.

மல்லிகைப் பூவை பால் கட்டிய பகுதியில் வைத்து கட்டி விடலாம் அல்லது பூவை அரைத்து பற்று போல் போட குணம் தெரியும். முட்டைகோஸ் இலைகளை பெரியதாக எடுத்துக்கொண்டு அதனை சிறிது நேரம் சூடான நீரில் போட்டு எடுத்து பொறுக்கும் சூட்டில் மார்பில் வைத்துக்கொள்ள தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.

பால் கட்டும் பிரச்னைக்கு சிறிது பூண்டை நீரில் போட்டு கொதிக்க விட்டு ஆறியதும் அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர பால் கட்டு பிரச்னை சரியாகும். ஐஸ் கட்டிகளை ஒரு மெல்லிய காட்டன் துணியில் சுற்றி மார்பகத்தில் வைத்து மிதமாக தேய்த்து ஒத்தடம் போல் வைத்தெடுக்க பால் கட்டி இருப்பது சரியாகிவிடும்.

வினிகரை ஒரு காட்டன் துணியில் தொட்டு நனைத்து வீக்கம் உள்ள மார்பகத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்க சரியாகும். நெல் உமியை சிறிய துணியில் முடிந்து தோசை கல்லில் வைத்து சூடு பண்ணி பொறுக்கும் சூட்டில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க பால் கட்டியிருப்பது சரியாகும்.

இதையும் படியுங்கள்:
எடமாமே பீன்ஸில் இருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்

இதுபோன்று பற்று போடுவது, கோஸ் இலைகளை வைப்பது போன்றவை செய்த பின் தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பகத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு கொடுப்பது அவசியம்.

பால் கட்டிக்கொண்டிருந்தால் அதை நன்றாக பீய்ச்சி வெளியேற்றிய பின்புதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில் கெட்டுப்போன பாலை குடித்து குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.

டாக்டரிடம் கலந்தாலோசிக்காமல் எந்த மருந்தையோ கிரீமையோ மார்பகங்களில் தடவக் கூடாது. குழந்தை பால் குடிக்கும் சமயம் அவை குழந்தையின் உடலுக்குள் சென்று விடும். எனவே, தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில குழந்தைகள் பால் குடிக்கும்போது தூங்கிவிடும். அதற்கு குழந்தையின் உள்ளங்காலை மெதுவாக விரலால் சுரண்டி விட்டோ அல்லது சுண்டி விட்டோ முழித்துக்கொள்ள செய்தால் திரும்பவும் பால் குடிக்க ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com