‘வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், எல்லா செயலிலும் முன்னோடியாய் இருக்க வேண்டும்’ என்று அனைவரும் நினைப்போம். ஆனால், அந்த வெற்றியைத் தடுப்பது நமது தயக்கம்தான். அதிலும் குறிப்பாக, குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் தயக்கம் மிகவும் ஆபத்தானது என்று கூடக் கூறலாம்.
எந்த ஒரு விஷயத்தையும் தயங்கித் தயங்கி செய்தால் அந்த விஷயம் நிச்சயம் வெற்றி பெறாது. குறிப்பாக, குடும்பங்களில் எந்த முடிவு எடுத்தாலும் சரி தயக்கமில்லாமல் எடுக்க வேண்டும். பொதுவாக, பெண்களிடம் தயக்கம் அதிகம் இருக்கும். அதனாலேயே அவர்கள் சில நேரங்களில் தோல்வியைத் தழுவுகின்றனர். பெண்கள் இனி தயக்கமில்லாமல் முடிவெடுத்து வெற்றிக்கனியைப் பறிக்க சில யோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
‘மற்றவர்களைப் போல நாம் இல்லை’ என தோற்றத்தையும், திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சுக்கோ அல்லது கேலிக்கோ உள்ளாகி இருந்தால் அது மனதளவில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான தருணங்கள் உண்டாக்கும் தயக்கம், ஒருகட்டத்தில் பயமாக மாறிவிடலாம். எந்தச் சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்குத் தயக்கத்தை, பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப் போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு, வரும் பிரச்னைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
உதாரணமாக, உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இதுபோன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.
பலருக்கு தங்களது வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் சூழலிலோ இதுபோன்ற தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தால், அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது.
மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கைகூடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு கொடுக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள். இது தயக்கம் தகர்க்கும் வழியாக உங்களுக்கு அமையும்.
பெண்கள் தேவை இல்லாமல் தயக்கம் கொள்வதால்தான் அவர்களுக்கு பல இடங்களில், பல நேரங்களில் அது பலவீனமாக அமைந்துவிடுகிறது. இனியாவது தயக்கம் இல்லாமல் குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி எந்த இடத்திலும் வெற்றிக் கொடி நாட்டுங்கள் பெண்களே.