உயிர் காக்கும் சாலைப் பாதுகாப்பு 10 கட்டளைகள்!

சாலைப் பாதுகாப்பு
சாலைப் பாதுகாப்பு
Published on

பொதுவாக, விபத்துகள் கவனக்குறைவாலேயே ஏற்படுகின்றன என்பது மறுக்க இயலாத உண்மை. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை அறிந்து அவற்றை தவறாமல் கவனமாகக் கடைபிடித்து வாகனங்களை ஓட்டினாலே சாலை விபத்துகள் கணிசமான அளவில் குறைந்து விடும்.  கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்ட பின்னர் கவலைப்படுவதால் ஒரு நன்மையும் இல்லை. கவனமாக வாகனத்தை ஓட்டி பாதுகாப்பாக வீடு சேரும்போது அனைவருக்கும் ஏற்படுவது நிம்மதி. பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.

தற்காலத்தில் மொபைல் போன்களில் பேசியபடியே பெரும்பாலானோர் வாகனத்தை ஓட்டுவதைப் பார்க்கிறோம். இது மிகவும் ஆபத்தான செயல் என்பதை உணர வேண்டும். பலர் பைக்கில் சென்றபடியே மொபைல் போனைப் பார்த்தபடியும் பேசியபடியும் செல்லுவதையும் பார்க்கிறோம். நண்பர்களே,  இனி தயவுசெய்து இப்படி செய்யவே செய்யாதீர்கள். அவசரமாக போனில் யாரிடமாவது பேச வேண்டும் என்றால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பார்க்கிங் லைட்டைப் போட்டு விட்டு போனில் பேசுங்கள். இது மிகவும் பாதுகாப்பான ஒரு வழியாகும்.

பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பத்து வகையான கட்டளைகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த பத்துக் கட்டளைகளை தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி நடப்போம்.

1. பாதசாரிகள் ஜீப்ரா கிராசிங்கில் பாதையைக் கடக்கும் போது அவர்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க ஓட்டுநர்கள் வழிவகை செய்ய வேண்டும்.

2. கார்களில் பயணிக்கும்போது ஓட்டுநரும் அருகில் அமர்பவரும் தவறாமல் சீட்பெல்ட்டை அணிந்து பயணம் செய்ய வேண்டும். விபத்துகளில் சிக்கும் சமயங்களில் சீட் பெல்ட் அணிவதன் மூலம் நம்மைக் காத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

3. சாலை விதிகளையும் போக்குவரத்து சிக்னல்களையும் கவனித்து பின்பற்றி செயல்பட வேண்டும்.

4. உங்கள் வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டாதீர்கள். எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அதை அறிந்து அந்த வேகத்திற்கு மிகாமல் வாகனத்தை இயக்க வேண்டும்.

5. வாகனத்தை உரிய நேரத்தில் பராமரித்து சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்.  இத்தகைய செயல் விபத்துக்களையும் வாகனம் வழியில் நின்று போவதையும் தடுக்கும்.

6. வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியை உபயோகிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இத்தகைய செயலானது உங்கள் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை ஏற்படுத்தி  உங்களுக்கு பெரிய இழப்பினைத் தரும்.

7. இரண்டு சக்கர வாகனத்தை இயக்கும்போது கட்டாயமாக தலைக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும்.  இது விபத்தின் மூலம் ஏற்படும் தலைக்காயத்தைத் தடுத்து உயிரைக் காக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிகமாக நொதித்த உணவுகள் ஆரோக்கியக் கேடுகளை உண்டுபண்ணும் தெரியுமா?
சாலைப் பாதுகாப்பு

8. உங்கள் நலனையும் சாலையில் செல்வோரின் நலனையும் கருத்தில் கொண்டு ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

9. சாலை என்பது அனைவருக்கும் பொதுவானது. அது நமக்கு மட்டுமே சொந்தமல்ல.  இதைக் கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டும்.

10. குடிவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டாதீர்கள்.

இந்த பத்து கட்டளைகளும் நமது பாதுகாப்பிற்காகத்தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவோம்.  மகிழ்ச்சியாக வீடு சென்று சேர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com