

‘புது வருடம் பிறந்து விட்டது, ஆனாலும் பழைய கவலைகள் அப்படியேதான் மனதில் இருக்கிறது, எதற்கும் தீர்வு இல்லை. நானும் அப்படியேதான் இருக்கிறேன், மகிழ்ச்சி என்பது வாழ்வில் எப்போதும் வராதா?’ என்ற ஏக்கத்தில் பலரும் புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? மனதில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் கட்டு கட்டாக பணம் தேவையில்லை, பெரிய பங்களாக்கள் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களே போதும். அதுமட்டுமின்றி, சின்னச் சின்ன பழக்க வழக்கங்களும் மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயம் நமக்கு வழங்கும். மகிழ்ச்சிக்கான சில எளிய நடைமுறை வழிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
தினசரி பழக்கங்களாக காலையில் எழுந்ததும் நேற்று நடந்த நல்லதோர் நிகழ்வை நினைத்து உற்சாகம் பெறுங்கள். தினமும் 15 முதல் 20 நிமிடம் சூரிய ஒளி உடலில் படும்படி நடக்கவும். மன அமைதிக்கு நேரத்தை உறுதி செய்து அதன்படி காலை எழுந்து இரவு உறங்கும் பழக்கம் ஏற்படுத்துங்கள். ஏனெனில், மகிழ்வான மனதுக்கு இதமான தூக்கம் அடிப்படையாகும்.
அதிகம் யோசிப்பதை குறைத்து எவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம்.தினமும் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி / தியானம் ஏதாவது ஒன்றை செய்யவும். தேவையில்லாத ஒப்பீடுகளைத் தவிருங்கள். பிடித்தவர்களுடன் மனம் திறந்து பேசினால் மனச்சுமை குறையும். பிறருக்காக அல்லாமல் நம் மன அமைதிக்காக மன்னிக்கக் கற்றுக்கொண்டால் நல்லது. மற்றவருக்கு உதவுவது நம்மாலும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடிகிறதே எனும் உள்ளார்ந்த மகிழ்ச்சியைத் தரும்.
பிடித்த பாட்டு அல்லது இசை கேட்பது, பிடித்த புத்தகம் வாசித்தல், பழைய நல்ல நினைவுகளை புகைப்படங்கள் மூலம் அல்லது கற்பனையில் மீண்டும் நினைப்பது, எவரும் இங்கு நூறு சதவீதம் முழுமையானவர் இல்லை. அடுத்தவருக்காக அப்படி பரிபூரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘நான் நிறைவானவர்’ எனும் உணர்வே மகிழ்ச்சி தரும். மகிழ்வாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்பு இங்கு காத்துக் கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கை மட்டுமே மனதில் வேண்டும்.
மன அழுத்தத்திற்கான தீர்வுகள்: உடனடியாக 5 முதல் 10 நிமிடங்கள் ஒதுக்கி 4 விநாடி மூச்சு → 4 விநாடி நிறுத்துதல் → 4 விநாடி வெளியே (5 முறை)என 4 – 4 – 4 மூச்சுப்பயிற்சி விதியை எடுங்கள். சீரான சுவாசம் மன அழுத்தத்தைக் குறைக்கும். காகிதத்தில் கவலை தரும் விஷயங்களை எழுதி அதை அப்படியே கிழித்துப் போடுங்கள். பாரம் குறையும்.
தூக்கமின்மைக்கு தீர்வுகள்: தூங்கும் முன் (30 முதல் 60 நிமிடம்) மொபைல் / டிவிக்கு தடா போடுங்கள். லைட் மியூசிக் / மந்திரம் போன்றவை அமைதி தரும். உறங்கும் முன் வெதுவெதுப்பான பால் அருந்தலாம். படுக்கையில் சோஷியல் மீடியா / சீரியல் போன்றவற்றை தவிர்த்து, ‘இப்போது ஓய்வு மட்டுமே’ என்று உறுதியாக இருங்கள்.
தனிமை உணர்வுக்கு தீர்வுகள்: தினமும் ஒரே ஒரு நபருக்காவது ‘எப்படி இருக்கீங்க?’னு ஒரு மெசேஜ், உரையாடல், 10 நிமிடம் மக்கள் இருக்கும் இடங்கள் (கடை / பார்க்) சென்று வேடிக்கை பார்ப்பது, ஒரு புதிய ஹாபியாக ஓவியம், தோட்டம், சமையல், எழுதுதல் போன்ற கலைகளில் ஈடுபடுவது தனிமையை விரட்டும் எளிய வழிகள்.