
சாதாரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் முழுக்க முழுக்க முழு பொறுப்பையும் குழந்தையின் அம்மாதான் கவனிப்பார் அல்லது அந்த வீட்டில் உள்ள பெண்கள் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்கள் குழந்தை பக்கத்திலேயே வர மாட்டார்கள். ஆனால், சில வித்தியாசமான ஆண்கள் இன்று காலத்திற்கேற்ப மாறி வருகிறார்கள். அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
எனது தோழியின் கணவர், அவரது குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அவருக்குக் குழந்தை பிறந்தவுடன் அவர் நடந்து கொண்ட விதம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘குழந்தையை கவனிப்பது எனது மனைவியின் வேலை. எனது வேலை அல்ல’ என்று எண்ணியிருந்தேன். குழந்தைக்கு என்னை நன்றாகப் புரிய வேண்டும் என்று எண்ணி மனைவியுடன் இணைந்து குழந்தையை நன்கு பராமரித்தேன். இதனால் எனது மனைவிக்கும் ஓய்வு கிடைத்தது. இதனால் அவளின் சிடுசிடுப்பு குறைந்து நன்றாக ஓய்வெடுக்கவும் வீட்டில் உள்ள மற்ற பணிகளைச் செய்யவும் நேரம் கிடைத்தது.
குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘குழந்தையை தாலாட்டினேன். படுக்கையை சரி செய்தேன். விடுமுறை நாட்களில் குழந்தையை குளிக்க வைப்பதிலிருந்து, அரவணைத்து, உணவு ஊட்டுவது, டயாபர் மாற்றுவது என்று தினசரி இதை பகலில் மனைவி செய்ய, இரவில் நான் கவனித்து வந்தேன். விடுமுறை நாள் என்றால் முழுவதும் நானே குழந்தைகளை கவனித்தேன். இப்பொழுது எனக்கு என் குழந்தை ஒரு திறந்த புத்தகம் போல் ஆகிவிட்டது. குழந்தையுடன் சேர்ந்து நானும் வளர்கின்றேன். குழந்தையின் வளர்ச்சியில் நானும் ஒரு பகுதி ஆகிவிட்டேன் என எண்ணும்போது அது எனக்கு ஒரு நல்லுணர்வைக் கொடுக்கிறது என்று கூறினார்.
அவர் மனைவி கூறும்பொழுது, ‘இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருவதற்கு எனது கணவர் எடுத்துக்கொண்ட உற்சாக பங்களிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இதனால் சில நாட்கள் ஆஃபீஸ் சென்று வருவேன், சில நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிவேன். ஆனால், எனக்கு சலிப்பு தட்டுவதில்லை. பிள்ளைகளுக்கு அன்புடனும்,அக்கறையுடனும் செயலாற்றும் அப்பாவாக, எனக்கு நல்ல கணவராக குடும்பத்தை அன்பால் அரவணைப்பவராக இருப்பதால் குழந்தை வளர்ப்பதற்கு என்று தனியாக ஆட்களை வைத்துக்கொள்ளாமல் வளர்த்து விட்டோம். இதில் முழுக்க முழுக்க எனது கணவரின் பங்களிப்புதான் உயரியது’ என்று கூறினார்.
அதேபோல், வளர்ந்த குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதில்லை. அதைவிட எங்களின் அன்பு, அக்கறை, வளரும் சூழலும், சுத்தமும் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பொழுதுபோக்கும் நடத்துவதால் விளையாட்டுப் பொருட்களை அதிகம் அவர்கள் விரும்புவதில்லை. அதேபோல், குழந்தைகளுக்கு டிவியில் ரைம்ஸ் போட்டுக் காட்டுவது, அதனுடன் விளையாட விடுவது என்று இல்லாமல், அதிகமாக நாம் உரையாடும்போதும், பாடும்போதும், எதையாவது கதைகள் கூறும்போதும் அவர்களுக்குள் மொழியாற்றல் வளர்வதை உணர முடிகிறது. அதைத்தான் குழந்தைகள் மிகவும் விரும்புகின்றார்கள் என்று நடைமுறையில் கண்டதை சிலாகித்துக் கூறினார்.
இதுபோல், தாய் - தந்தை இருவரும் சமமாகப் பொறுப்புகளை குழந்தை வளர்ப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் வளர்ச்சி அடைகிறார்கள். குழந்தையும் அழகாக வளர்கிறது. தன்னையும் வளர்த்து மற்றவர்களையும் வளர்த்து விடுவார்கள். கடந்த காலம் கடந்தவைதான். அப்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருக்கும். ஆதலால் ஆண்கள் அதிகம் அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்கள் மட்டுமே சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.
நிகழ்காலம்தான் இனி முக்கியம். ஆதலால் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் மனைவிக்கு உறுதுணையாக இருந்து நம் கண் முன் இருக்கும் நிகழ்காலத்தை ஏற்று முழுமையாகவும், ஈடுபாட்டுடனும் பெற்றோர்கள் வாழ வேண்டும். அதனைப் பார்த்து பிள்ளைகள் வளர்வார்கள் என்பது உறுதி. அதுதான் வேலைக்குச் செல்லும் மனைவிக்குச் செய்யும் மாபெரும் உதவி. திருமண பந்தத்தின் உச்சம்.