
பலரும் தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையை சரியான திட்டமிடுதலுடன் வாழ்ந்து மற்றவர்க்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள். அதே நேரம் இன்னும் சிலர் வாழத் தெரியாமல் வாழ்ந்து விட்டு, மற்றவர்களுக்கும் தம் குடும்பத்திற்கும் பாரமாக ஆகி விடுகிறார்கள்! இன்னும் சிலர் தமது அகம்பாவத்தால் தோல்வியை சந்திக்கிறார்கள். சிலர் வெகுளித்தனமாய் வாழ்ந்து இரக்க குணம் கொண்டு அனைத்தையும் இழந்து விடுவதும் சில குடும்பங்களில் நிகழ்வதும் இயல்பே.
சில விஷயங்களில் நாம் மூத்த அறிஞர்களின் வார்த்தைகளுக்கேற்ப வாழ வேண்டும். அது கொஞ்சம் கடினமானதாக இருந்தாலும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் வெல்வது எவ்வகையிலும் எளிதானதே!
நமது எண்ணம் போலத்தான் வாழ்க்கை அமையும். அந்த நிலையில் நமது தீய நோக்கங்களை நம்மை விட்டு அகற்றிடவேண்டும். அதுவே நோ்மறையானது. இதைத்தான், ‘நார்மன் வின்சென்ட் பீல்’ என்பவர் தனது கருத்தில் சொல்லியுள்ளார். "உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். அதுசமயம் உங்கள் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டு விடுவீா்கள் எனக் கூறியுள்ளார். சரிதானே!
உங்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே உங்களின் வெற்றிக்கு வழிகாட்டியாய் அமையும் என்ற நம்பிக்கையே உங்களுக்கு பலமானது. உங்களின் கட்டுப்பாடுகள் உங்களிடமே நிலவ வேண்டும். அது வெளியே செல்வது நல்லதல்ல. இதைத்தான், ‘வால்டர் டோயில் ஸ்டேபிள்’ என்பவர் தமது கருத்தில், “உங்கள் வாழ்க்கையின் மீதுள்ள கட்டுப்பாடு உங்களிடமே இருக்க வேண்டும். உங்களுக்கு வெளியே உள்ள சக்திகளிடம் அது சென்றுவிடக் கூடாது” எனக் கூறியுள்ளார். புரிகிறதா?
அதேபோல, என்னிடம் நல்ல குணங்கள் உள்ளன என நாமே சுயதம்பட்டம் அடிப்பது தேவையில்லாத அளவுகோலாகும். அதை நாம் எப்பாடு பட்டாவது நிரூபித்து, நமது செயல்கள் அடுத்தவருக்கும் நல்ல விதமாய் சென்றடைய நமக்கு நிதானமும் முயற்சியும் கைகொடுக்க வேண்டும்.
இதைத்தான், ‘ரோஷ் ஃபெக்காலீடு’ என்பவர் தனது கருத்தில், “நமக்கு சிறந்த குணங்கள் இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த குணங்களை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இப்படி பல்வேறு அறிஞர்கள் நிறையவே அறிவுரைகள், பொன்மொழிகளை எழுதியுள்ளார்கள்.
முதலில் எதிர்மறை சிந்தனையோடு. ‘நம்மால் முடியாது. கிடைக்காது’ எனும் குப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு நோ்மறை சிந்தனைகளோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற தாரக மந்திரத்தை நமதாக்கிக் கொண்டால் வாழ்க்கையின் உச்சம் தொடலாமே! இமய மலை மீது எப்படி ஏறுவது என்ற எதிர்மறை சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வளவு உயரமுள்ள இமயமலையிலிருந்து எளிதாக இறங்கிவிடலாம் என சிந்தித்துப் பாருங்கள். கடினமான செயல்கள் கூட உங்களை விட்டு விலகிவிடும்.
நல்லதையே நினைப்போம், நல்ல செயல்களையே கடைபிடிப்போம். ‘வாழு வாழ விடு’ என்பதே தாரக மந்திரமாய் கவனத்தில் கொள்வோம். வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தானாகவே வரும்.